சிறையில் ‘மஞ்சுளா கழுத்தில் சேலையை கட்டி இழுத்துவரப்பட்டதை பார்த்தேன்’ இந்திராணி பரபரப்பு வாக்குமூலம்


சிறையில் ‘மஞ்சுளா கழுத்தில் சேலையை கட்டி இழுத்துவரப்பட்டதை பார்த்தேன்’ இந்திராணி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 Jun 2017 9:16 AM GMT (Updated: 28 Jun 2017 9:16 AM GMT)

சிறையில் பெண்ணின் கழுத்தில் சேலையை கட்டி இழுத்துவரப்பட்டதை நான் பார்த்தேன் என இந்திராணி முகர்ஜி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

மும்பை,
 
மும்பை பைகுல்லா பெண்கள் ஜெயிலில் கடந்த வெள்ளிக்கிழமை மஞ்சுளா என்ற கைதி ஜெயில் காவலர்கள் மற்றும் ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஜெயிலில் இருந்த பொருட்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் துணி, பொருட்களை தீவைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் காவலர்கள், ஊழியர்கள் 12 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். .

மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட 291 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் ஜெயில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலியான பெண் கைதியை சரமாரியாக தாக்கியதை பார்த்ததாக இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மேலும் சில கைதிகள் போலீசில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஜெயிலில் உணவுடன் வழங்கப்பட்ட முட்டையால் தான் சம்பவத்தன்று பெண் கைதி மஞ்சுளாவிற்கும், ஜெயில் காவலர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இவ்வழக்கு தொடர்பாக மும்பை கோர்ட்டில் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவுசெய்த இந்திராணி முகர்ஜி, ஜெயில் கண்காணிப்பாளர் அறையில் இருந்து மஞ்சுளாவை அவருடைய சேலையால் கழுத்தில் கட்டப்பட்டு தரதரவென்று இழுத்து வரப்பட்டதை நான் பார்த்தேன் என கூறிஉள்ளார். 

சிறையில் பெண் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்கியதில் கைதி மஞ்சுளா உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸ் பதிவு செய்து உள்ள வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க பகுதியில் லத்தி மற்றும் கட்டையை பயன்படுத்தி சித்தரவதை செய்யப்பட்டு உள்ளார் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்திராணி முகர்ஜி அளித்து உள்ள வாக்குமூலத்தில், மஞ்சுளா கண்காணிப்பாளர் அறையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதை கதவின் துளையின் வழியாக பார்த்தோம். இது தொடர்பாக கோர்ட்டில் உண்மையாக வாக்குமூலம் கொடுத்தால் உனக்கும் இதுதான் என மிரட்டினர். என்னையும், பிற கைதிகளையையும் சிறை ஊழியர்கள் கொடூரமான முறையில் தாக்கினர். எங்களை தாக்குதவதற்கு முன்னதாக சிறை முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டது என்றார். இந்திராணி முகர்ஜி தரப்பில் ஆஜரான வக்கீல், இந்திராணி முகர்ஜிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இச்சம்பவம் தொடர்பாக இந்திராணி முகர்ஜி போலீசில் புகார் தெரிவிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Next Story