குறைந்த கட்டணத்தில், குளிர்சாதன வசதிகளுடன் ரெயில்கள் விரைவில் இயக்க திட்டம்

பயணிகளின் வசதிக்காக முழுக்க முழுக்க குளிர்சாதன பெட்டிகள் கொண்ட குறைந்த கட்டண ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் முதல், 2–வது மற்றும் 3–வது வகுப்பு குளிர்சாதன (ஏ.சி.) வசதி கொண்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. ராஜ்தானி, சதாப்தி மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹம்சபார், தேஜாஸ் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் ஏ.சி. வசதி கொண்டவையாக உள்ளன.
இந்த ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்த அளவிலேயே ஏ.சி. பெட்டிகள் உள்ளதாலும் இந்த வசதியை அதிகமான பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
குறிப்பிட்ட தடங்கள்எனவே சாதாரண பயணிகளின் வசதிக்காகவும், அதிகமான பயணிகள் ஏ.சி. வசதியை பயன்படுத்துவதற்காகவும் முழுவதும் ஏ.சி. பெட்டிகளை கொண்ட ரெயில்களை விரைவில் அறிமுகப்படுத்த ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் இருக்கும் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட சில தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ள இந்த ரெயில்களில் முதல், 2–வது மற்றும் 3–வது வகுப்பு ஏ.சி. பெட்டிகளுடன், 3 அடுக்கு குறைந்த கட்டண ஏ.சி. பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் தானியங்கி கதவுகளும் இணைக்கப்பட்டு இருக்கும்.
ரெயில்வே அதிகாரி தகவல்இந்த பெட்டிகளில் அதிக குளிர் இருக்காது என்பதால் பயணிகளுக்கு போர்வை தேவையில்லை. ஏனெனில் இவற்றில் 24 முதல் 25 டிகிரி வரையிலான வெப்பம் இருக்கும். பயணிகளின் வசதிக்காகவும், வெளியில் உள்ள வெப்பம் அவர்களை தாக்காமல் இருக்கவுமே இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முழுவதும் ஏ.சி. பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில்கள் அதிகமான பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் எனவும் அவர் கூறினார்.






