விஜய் மல்லையா உள்ளிட்டவர்களின் வங்கி மோசடி வழக்குகள் ‘சி.பி.ஐ. விசாரணையை கண்காணித்து வருகிறோம்’
விஜய் மல்லையா பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பி விட்டார்.
புதுடெல்லி,
இது போன்று பல்வேறு நபர்களும், வங்கிகளில் பெருந்தொகைகளை கடனாக வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது.
இதுபற்றி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம். பாசின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘விஜய் மல்லையா உள்ளிட்டவர்கள் செய்துள்ள 10 வங்கி மோசடி வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கண்காணிக்கிறது. வங்கியாளர்களின் செயல்பாடுகள் நேர்மையானதாக இருக்குமானால், அவர்கள் பயப்படத்தேவையில்லை’’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தாதவர்களிடம், அவற்றை தனிப்பட்ட முறையிலோ, கூட்டாகவோ வசூலிப்பதற்கு வங்கியாளர்களுக்கு தைரியம் வேண்டும்’’ என்றும் சொன்னார்.
‘‘கடன்களை கொடுப்பதும், திரும்ப வசூலிப்பதும் வங்கியாளர்களின் கடமை, தர்மம். அவர்கள் அவ்வாறு செய்வதில் வெளிநபர்கள் உதவி செய்ய முடியாது. வங்கியாளர்கள்தான் இது தொடர்பான சவால்களை சந்திக்க வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.