சீனாவுடான பிரிட்டிஷ் செய்த ஒப்பந்தத்தை ஜவகர்லால் நேரு அங்கீகரிக்கவில்லை, 1959 கடிதங்கள்
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதம் சிக்கிம் மற்றும் பூடான் எல்லையை இந்தியா ஒப்புக் கொண்டது என்பதற்கு மாறாக உள்ளது.
புதுடெல்லி,
ராணுவ பலம் இல்லாத திபெத், ஜின்ஜியாங் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது உலகம் அறிந்த உண்மையாகும். திபெத்தியர்களின் போராட்டங்களை அடக்க அங்கு பெருமளவில் சீனர்களை குடியமர்த்தி உள்ளது.
இதேபோல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் சீன குடியிருப்புகளை அதிகப்படுத்தி வருகிறது.
திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. பாகிஸ்தானைப் போல் சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது. இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது.
சீனாவின் ராணுவமான மக்கள் விடுதலைப்படையினர் காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் அருணாசலபிரதேசம் போன்ற மாநிலங்களின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ள பாங்கோக் ஏரிப் பகுதியில் கடந்த மார்ச் 8–ந்தேதி கூட சீன ராணுவம் ஊடுருவியது. எல்லையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள இந்திய ராணுவம் சீனாவின் நகர்வை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.
ஊடுருவும் ஒவ்வொரு முறையும் இந்திய ராணுவம் எதிர்த்து நின்று சீன ராணுவத்தை வெளியேற்றி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்பதும் இந்திய உளவுத்துறையின் தகவலாகும்.
சிக்கிம் விவகாரம்
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியா-பூடான்- திபெத் ஆகியவற்றின் முச்சந்திப்பு எல்லை அருகே டோக்லாம் என்னும் பகுதி உள்ளது.
இந்தியா - சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லைப் பகுதி உள்ளது. இதில் 220 கிலோ மீட்டர் தூரம் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனா எல்லையில் அடாவடியாக கட்டுமான பணிகளை முன்னெடுத்தது. அதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. பூடானும் எதிர்ப்பை பதிவு செய்தது. இங்கு 2012-ம் ஆண்டு இந்தியா அமைத்த 2 பதுங்குகுழிகளை அண்மையில் சீனா அழித்தது.
மேற்கொண்டு சீன ராணுவம் சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதை தடுக்கவும் அங்கு இந்தியா ராணுவத்தை குவித்து உள்ளது.
3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இப்போது எழுந்து உள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வற்புறுத்தி வருகிறது. என்றபோதிலும் டோக்லாம் பகுதியில் இந்திய படைகள் நகராமல் அப்படியே நிலை கொண்டு உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இந்தியா தயாராகவே உள்ளது, ஆனால் படையை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த பகுதி தங்களுடைய எல்லைக்குள் இருப்பதாகவும் சீனா கூறுகிறது.(டோக்லாம் பகுதியை பூடான் நாடும் உரிமை கோருகிறது) சிக்கிம் செக்டாரில் சீன ராணுவம் இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. தோகா லா பகுதியானது சிக்கிம், பூடான் - திபெத்தை எல்லையில் அமைந்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழியை அழித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வார்த்தை வாதம்
சிக்கிம் எல்லை விவகாரம் பெரிதாக உருவான நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், 1962 போரை குறிப்பிட்டு இந்தியா வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்றார். இதற்கு பதிலடி கொடுத்த அருண் ஜெட்லி 1962 இந்தியாவை 2017 இந்தியாவுடன் ஒப்பிட முடியாது, இந்தியா இப்போது மாறுபட்டு உள்ளது என்றார்.
சிக்கிம் விவகாரம் தொடர்பாக சீனா தினசரி பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. சீன அரசு ஊடகங்களும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், “1962 இந்தியாவுக்கும் 2017 இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் கூறுவது சரியே அதே போல்தான் சீனாவும் மாறிவிட்டது,” என்றார்.
இந்தியா-சீனா தங்களுக்கிடையேயான மோதலை சரியாக கையாளவில்லை என்றால் போர் சாத்தியமே, சீனா தனது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கும் என சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் செய்தி வெளியிடப்பட்டது. இப்பிரச்சனை நீண்டு வரும் நிலையில் இந்தியா படைகளை குவித்து இருப்பது நம்பிக்கை துரோகம் என சீனா குற்றம் சாட்டிஉள்ளது.
நம்பிக்கை துரோகம்
1890-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சிக்கிம் மீதான சீன-பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு 1959-ம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் என்லாய்க்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து வந்த இந்திய அரசுகளும் இதை ஏற்றுக்கொண்டு உள்ளன. சிக்கிம் பகுதியில் இந்திய-சீன எல்லை நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தை இந்தியா நன்றாக கூர்ந்து கவனிக்கவேண்டும். டோக்லாம் பகுதி எங்களுக்கே சொந்தமானது. தற்போது இந்திய அரசு இங்கு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இந்த ஒப்பந்தத்துக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும்.
எனவே இந்திய துருப்புகள் உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்தது.
ஜவகர்லால் நேரு அங்கீகரிக்கவில்லை
இந்நிலையில் சிக்கிம் எல்லை விவகாரம் தொடர்பாக சீன - பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது என சீனா கூறியதற்கு மாறாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்கள் உள்ளன.
இந்தியாவின் முதல் பிரதமர் எழுதிய கடிதங்கள், திபெத் மற்றும் சிக்கிம் எல்லை விவகாரம் தொடர்பாக 1890-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சீனா இடையிலான ஒப்பந்தத்தை முழுவதமாக ஜவகர்லால் நேரு அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுகிறது.
1959-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் சீனாவின் இரண்டாம் கட்ட தலைவராக இருந்த பிரதமர் சோ என்லாய்க்கு ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்களில் திபெத் - பூடான் மற்றும் இந்தியா இடையிலான முச்சந்திப்பு எல்லை விவகாரம் தொடர்பாக வேறுபாடுகளை இந்தியா குறிப்பிட்டு காட்டிஉள்ளது. 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி தேதியிட்ட கடிதத்தை குறிப்பிட்டு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் காங், சீன - சிக்கிம் எல்லை விவகாரம் தொடர்பாக எந்தஒரு பிரச்சனையும் இல்லை என்பதை என்லாயிடம் நேரு உறுதி செய்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி சீன பிரதமருக்கு நேரு எழுதிய கடிதமானது சீனா இப்போது உலகிற்கு சொல்ல வருவதைவிட அதிகமான உண்மையை சொல்கிறது.
“1890 உடன்படிக்கையானது சிக்கிம் மற்றும் திபெத் இடையிலான எல்லையை வரையறை செய்கிறது; எல்லையானது பின்னர் 1895-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. திபெத் பிராந்தியத்தில் சிக்கிம் எல்லை தொடர்பாக எந்தஒரு பிரச்சனையும் கிடையாது. வடக்கு சிக்கிம்மை பொறுத்தவரையில் முச்சந்திப்பு தொடர்பாக பூடான் மற்றும் சிக்கிம் உடன் ஆலோசனை செய்ய தேவையில்லை, இது இப்போதைய சர்ச்சைக்குரிய பகுதியாகும். 1890 ஒப்பந்தம் ஒரு சமமான ஒப்பந்தமாகாது, திபெத், சிக்கிம் மற்றும் பூடான் இதில் சம்பந்தப்பட்டவில்லை,” என நேரு எழுதி உள்ளார் என கடிதம் கிடைக்க பெற்று உள்ளதாக இந்துஸ்தான் டைமஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
சிக்கிம் மற்றும் பூடான் உடனான எல்லையானது இணைய வேண்டும் என்பதை ஜவகர்லால் நேரு குறிப்பிட்டு உள்ளார்.
இப்போதைய ஆலோசனையின் கீழ் சிக்கிம் மற்றும் பூடான் எல்லைகள் விவகாரம் வராத நிலையில் உங்களுடைய (சீன பிரதமர் சோ என்லாய்) அறிக்கையின் உட்குறிப்பின் என்ன என்பது எங்களுக்கு தெளிவாகவில்லை. திபெத் மற்றும் பூடானை சேர்ந்த குறிப்பிட்ட பகுதியை உங்களுடையதாக சீனா புகைப்படம் வெளியிடுகிறது. இந்தியா மற்றும் பூடான் இடையிலான ஒப்பந்த உறவுகள் அடிப்படையில் பூடான் வெளியுறவுத்துறை விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பிற அரசுகளிடம் எடுத்துச் செல்வது இந்தியாதான், சீன அரசிடமும் பூடான் அரசு சார்பாக நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை எடுத்து முன்வைத்து உள்ளோம்,” என கூறிஉள்ளார் நேரு.
சீன வரைபடங்களில் பூடான் மற்றும் திபெத் எல்லைகள் சரிசெய்யப்படவேண்டும், இதே செக்டாரில் திபெத் பிராந்தியத்தில் சீனா உடனான இந்திய எல்லை தொடர்பாகாவும் ஆலோசனை நடத்தப்படவேண்டும் என நேரு குறிப்பிட்டு உள்ளார்.
சீன வெளியுறவுத்துறை மார்ச் 22-ம் தேதி நேரு, சோ என்லாய்க்கு எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டு உள்ளது. ஆனால் முழு கடித விபரமும், புகைப்படமும் வெளியிடப்படவில்லை. நேரு 1890 ஒப்பந்தத்தை குறிப்பிட்டு எழுதி உள்ள கடிதத்தில், சிக்கிம் உடனான எல்லையானது இந்தியாவின் பாதுகாப்பு அரணாகும், திபெத் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எல்லையானது 1890 உடன்படிக்கையின் படி தீர்மானிக்கப்பட்டது. அதுவே கூட்டாக 1895ம் ஆண்டு எல்லைக்கோடு வரையறை செய்யப்பட்டது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் நேரு எல்லை விவகாரம் தொடர்பாக வேறுபாடுகள் தொடர்பாக தெளிவாக பேசிஉள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா - சீனா இடையே மெக்மோகன் லைன் என்ற பெயரில் எல்லைக் கோடு வகுக்கப்பட்டது. இதனை அந்த கடிதத்தில் பிரதமர் நேரு எடுத்துரைத்து உள்ளார். ஆனால் சீன வெளியுறவுத்துறை அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Related Tags :
Next Story