ஜி.எஸ்.டி எதிரொலி: மானிய சிலிண்டர் விலை ரூ.32 வரை உயருகிறது
ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து மானிய சிலிண்டர் விலை ரூ.32 வரை உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதையடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.32 வரை உயர உள்ளது. டெல்லியில்14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 446.65 ல் இருந்து 477.46 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலை ரூ. 465.56 ஆக இருக்கும் என்று எண்ணைய் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு காரணமாக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 50 வரை உயர்ந்தது. இதன்பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு கடுமையாக மானிய விலை சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்கள் மானியத்தின் கீழ் பெறமுடியும். 12-க்கும் மேல் கூடுதலாக சிலிண்டர் வேண்டும் என்றால் சந்தை மதிப்பில் மட்டுமே பெற முடியும். மானியம் இல்லாத சிலிண்டர் ஒன்று சந்தையில், ரூ.564(டெல்லியில்) என்ற விலையில் வழங்கப்படுகிறது
Related Tags :
Next Story