மருத்துவ படிப்பு சேர்க்கையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகிதம் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு


மருத்துவ படிப்பு சேர்க்கையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகிதம் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு
x
தினத்தந்தி 5 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பு சேர்க்கையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கிய தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

தமிழக அரசு ஜூன் 22-ந்தேதி பிறப்பித்த ஆணையில் மருத்துவ கல்வியில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 15 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய பிறகு, மீதமுள்ள 85 சதவிகித இடத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகிதமும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக காவ்யா என்ற மாணவியின் தந்தை ஆர்.நக்கீரன் உள்ளிட்ட 18 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நளினி சிதம்பரம் வாதம்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

தமிழக அரசு மருத்துவ கல்வியில் மத்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கியுள்ளது. தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மீதமுள்ள 85 சதவிகித இடத்தில் போட்டியிட வேண்டியுள்ளது. ஆனால் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியது போக மீதமுள்ள 85 சதவிகிதத்தில் 15 சதவிகிதம் மட்டுமே சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பாரபட்சமானது, மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. தமிழ்நாட்டில் பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் எந்த பாடத்திட்டத்தில் பயின்றார்கள் என்ற பாகுபாடு இன்றி அவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்க வேண்டும்.

சமமான வாய்ப்பு

இதேபோல குஜராத் மாநிலத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அதிகமாக ஒதுக்கிய உத்தரவை சட்டத்துக்கு புறம்பானது என்று குஜராத் ஐகோர்ட்டு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு ஜூன் 22-ந்தேதி பிறப்பித்துள்ள அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தன்னுடைய வாதத்தில் கூறினார்.

அரசுக்கு நோட்டீஸ்

இதனை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீது வெள்ளிக்கிழமைக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

Next Story