இந்தியா பலவீனமான பிரதமரை கொண்டு உள்ளது ராகுல் காந்தி விமர்சனம்


இந்தியா பலவீனமான பிரதமரை கொண்டு உள்ளது ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 5 July 2017 2:12 PM IST (Updated: 5 July 2017 2:12 PM IST)
t-max-icont-min-icon

‘இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு-காஷ்மீர்’ என அமெரிக்கா அழைத்ததை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி பலவீனமானவர் என ராகுல் விமர்சனம் செய்து உள்ளார்.


புதுடெல்லி,

அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவன் சையது சலாவுதீனை சர்வதேசக் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்து. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் சையது சலாவுதீன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

இந்தியா நிர்வகித்து வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பகுதி என்று அமெரிக்கா குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவின் நிர்வாகத்தில் இருக்கும் பகுதி என்று குறிப்பிடப்பட்டதை மத்திய அரசு ஏற்று கொண்டிருக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்தியா நிர்வகித்து வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பகுதி என்று அமெரிக்கா குறிப்பிட்டது வழக்கமான ஒன்றுதான் என்று மத்திய அரசு தெரிவித்தது.  

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சையது சலாவுதீன், இந்திய நிர்வாகத்துக்குள்பட்ட ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார் என்பதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார் என்பதைத்தான் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இந்திய நிர்வாகத்துக்குள்பட்ட ஜம்மு-காஷ்மீர் என்ற வார்த்தைகளை அமெரிக்கா பயன்படுத்துவது புதிதல்ல. ஏற்கெனவே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் 2010, 2013 அறிக்கைகளிலும் இந்த சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

இதுபோன்று பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது எச்-1பி விசா குறித்து பேசப்படவில்லை. 

இதுதொடர்பான செய்திகளின் புகைப்படங்களை பதிவிட்டு டுவிட் செய்து உள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா பலவீனமானவரை பிரதமராக கொண்டு உள்ளது,” என விமர்சனம் செய்து உள்ளார்.  

Next Story