இரு அணிகளையும் இணைப்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார்-டிடிவி தினகரன்


இரு அணிகளையும் இணைப்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார்-டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 5 July 2017 5:49 PM IST (Updated: 5 July 2017 5:49 PM IST)
t-max-icont-min-icon

6-வது முறையாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

பெங்களூர்

ஜெயலலிதாவின் மரணம், சசிகலாவின் சிறைவாசம் ஆகியவற்றுக்கு பிறகு திடீரென அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரானார் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி எனவும், சசிகலா அணி அ.தி.மு.க. அம்மா அணி என்றும் அழைக்கப்படுகிறது.

கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வழிநடத்திய டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்று கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

இதனை ஏற்று கட்சியில் இருந்து ஒதுங்கிய தினகரன், சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார். ஆனால் இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பச்சைக் கொடி காட்டாததால் தினகரன் கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் தினமும் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் தினகரன் அடிக்கடி பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 5 முறை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள், பிரச்சினை பற்றி சசிகலாவுடன், தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது போன்ற சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த தினகரன், 60 நாட்கள் வரை சசிகலா காத்திருக்கச் சொல்லி இருக்கிறார். அதுவரை பொறுமையாக இருப்பேன் என்று தெரிவித்தார். இதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தினகரன் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் தினகரன் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். 6-வது முறையாக சசிகலாவை அவர் சந்தித்துள்ளார்.
அவருடன் கர்நாடக செயலாளர் புகழேந்தி மற்றும் நடிகர் ரித்திஷ் ஆகியோர் இருந்தனர்  இந்த சந்திப்பின் போது கட்சியில் நிலவும் குழப்பங்கள் குறித்து தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சசிகலாவை சந்தித்தபிறகு டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் விலகி இருக்கிறேன். ஆக. 4-ம் தேதிக்கு பிறகு நான் மீண்டும் கட்சி பணிகளை தொடங்குவேன். இரு அணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும். எவ்வாறு இணைப்பது என்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார். உறவினர் என்ற முறையிலேயே சசிகலாவை சந்தித்தேன்,அரசியல் பேசவில்லை. 

தமக்கும் திவாகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. 
தனக்கும், திவாகரனுக்கும் இடையே சமரசம் செய்ததாக நடராஜன் கூறுவது தவறு.  நடராஜன் அதி.மு.கவின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல. நடராஜன் அதிமுக உறுப்பினர் அல்ல.  பாரதீய ஜனதா  ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தருமாறு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Next Story