தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு சட்டம் இயற்றாதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு இதுவரை சட்டம் இயற்றாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு இதுவரை சட்டம் இயற்றாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம்தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பாக நடுநிலையான மற்றும் சுதந்திரமான தேர்வுக்குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரி அனூப் பரன்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடுகையில் கூறியதாவது:–
அரசியல் சட்டத்துக்கு எதிரானதுதற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களின் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கடைபிடித்து வரும் நடைமுறைகள் எதேச்சாதிகாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. வெளிப்படைத்தன்மை எதுவும் இன்றி இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன. இது சட்டத்துக்கு புறம்பானது ஆகும். இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.
நீதிபதிகள் நியமனங்களில் உள்ளது போன்ற கொலீஜியம் (தேர்வுக்குழு) எதுவும் இல்லாமலும், உரிய சட்டம் இன்றியும் நேரடியாக செய்யப்படும் இந்த நியமனங்கள் அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
உத்தரவிட வேண்டும்அரசியல் சட்டத்தின் படி தேர்தல் கமிஷன் அமைப்பின் நேர்மைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியாவில் தேர்தல்களை நேர்மையான முறையில் நடத்தி ஜனநாயகத்தை தழைக்கச் செய்யும் கடமை தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. எனவே தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனங்கள் தொடர்பாக மத்திய அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதாடுகையில் கூறியதாவது:–
முகாந்திரம் இல்லைதற்போதைய நடைமுறையில் பிரச்சினை ஏதும் இல்லை. தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தேர்ந்தெடுக்கும் முறை திருப்திகரமாகவே உள்ளது. இதுவரை இந்த பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நடுநிலைத்தன்மையை கடைப்பிடித்தவர்கள். கடைப்பிடித்து வருபவர்கள். இந்த முறையில் ஏதேனும் சிறு குறைகள் இருந்தால் பாராளுமன்றம் சட்டம் இயற்றி இருக்கும். எனவே இதில் தலையிடுவதற்கு மனுதாரருக்கு முகாந்திரம் ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டம் இயற்றாதது ஏன்?அதற்கு நீதிபதிகள், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனங்கள் இதுவரை சிறப்பாக நடைபெற்று வருவதை தாங்கள் ஒப்புக்கொள்ளவதாகவும், என்றாலும் இந்த நியமனங்களுக்காக மத்திய அரசு ஏன் இதுவரை சட்டம் இயற்றவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனங்களுக்கு சுதந்திரத்தன்மை கொண்ட கொலீஜியம் முறையை மத்திய அரசு ஏன் உருவாக்கக்கூடாது? இது தொடர்பான சட்டத்தை ஏன் பாராளுமன்றத்தில் இயற்றக்கூடாது? அரசு ஏன் இந்த விஷயத்தில் தலையிட்டு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்கள்.
தேர்வுக்குழுஅத்துடன், அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் தலையீடு அற்ற சுதந்திரமான அமைப்பு இதற்காக உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்வதற்கு உரிய சட்டமும், நியமன குழுவும் உள்ளபோது தலைமை தேர்தல் கமிஷனரை நியமிக்க அது போன்று சட்டத்தையும், தேர்வுக்குழுவையும், அமைப்பையும் மத்திய அரசு ஏன் உருவாக்கக்கூடாது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு வேறொரு நாளில் விரிவாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.