நாடு கடத்தக்கோரி இந்தியா தொடுத்த வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்
நாடு கடத்தக்கோரி இந்தியா தொடுத்த வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜரானார்.
லண்டன்,
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்று இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 18-இல், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் சரணடைந்த மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை நீதிமன்றத்திடம் அளித்துவிட வேண்டுமென்று மல்லையாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன்பின்னர் அடுத்த விசாரணையின் போது விஜய் மல்லையாவுக்கு டிசம்பர் 4-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, வழக்கறிஞர்களின் ஆலோசனையின் படி நான் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story