லாலுவிற்கு எதிராக திடீர் வழக்குப்பதிவு, குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு


லாலுவிற்கு எதிராக திடீர் வழக்குப்பதிவு, குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு
x
தினத்தந்தி 7 July 2017 9:47 AM IST (Updated: 7 July 2017 9:47 AM IST)
t-max-icont-min-icon

லாலுவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உள்ள சிபிஐ அவருடைய குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு உள்ளது.


புதுடெல்லி,

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த போது ஓட்டல்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்து 12 இடங்களியில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு உள்ளது. 

லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி மற்றும் அவருடைய மகன் பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜாஷ்விக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என சிபிஐ தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்தியன் ரெயில்வேயின் கேட்ரிங் மற்றும் சுற்றுலாத்துறை கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் பி.கே. கோயல் மற்றும் லாலு பிரசாத்தின் நம்பிக்கைக்குரியவரான பிரேம் சாந்த் குப்தாவின் மனைவி சுஜாதாவும் பிற குற்றவாளிகள் என தெரியவந்து உள்ளது. குப்தா முன்னாள் பெருநிறுவன விவகாரத்துறை மந்திரியாவார். 

பீகார் மாநிலம் பாட்னா, டெல்லி, அரியானா மாநிலம் குர்கான், ஒடிசா மாநிலம் பூரி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணியளவில் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.



பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவர் அங்கு இல்லை. ஏற்கன்வே மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றுவிட்டார். ரெயில்வே நிலையங்களுக்கு அருகே உள்ள ஓட்டல்களை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. முக்கியமான ஓட்டல்களிலும் ரெய்டு நடந்து வருகிறது என தெரிகிறது. இம்முறைகேடு தொடர்பாக சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் எந்தஒரு தகவலையும் தெரிவிக்காமல், மிகவும் மவுனம் காத்து வருகிறார்கள் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

ஊழல் குற்றச்சாட்டுகளில் லாலுவின் மகள் மிசா பாரதி மற்றும் அவருடைய கணவர் ஷைலேஷ் குமாரிடம் வருமான வரித்துறை ஏற்கனவே விசாரணை செய்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக புதுடெல்லி மற்றும் அதனை சுற்றிஉள்ள பகுதிகளில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையடுத்தே ஓட்டல்களுக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக சிபிஐ நடவடிக்கையை தொடங்கி உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும் ஊழல் வழக்கில் போராடி வருகிறார், இப்போது அவர் பீகார் மாநில சுகாதாரத் துறை மந்திரியாக உள்ளார். 

2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்த ஒரு மகா கூட்டணிக்கு லாலு அழைப்பு விடுத்திருந்தார். தன்னுடைய குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்த லாலு, மோடி அரசு தன்னுடைய குடும்பத்தை வேட்டையாடுவதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story