“நான் எந்த தவறும் செய்யவில்லை” சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு பிரசாத் கருத்து


“நான் எந்த தவறும் செய்யவில்லை” சி.பி.ஐ. சோதனை குறித்து லாலு பிரசாத் கருத்து
x
தினத்தந்தி 8 July 2017 4:15 AM IST (Updated: 8 July 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது பதவிக்காலத்தில் ரெயில்வேத்துறை மிகவும் லாபகரமாக இயங்கியது என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

ராஞ்சி,

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். எனவே இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை. மேலும் திறந்த ஏலத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த ரெயில்வே ஓட்டல்களுக்கான குத்தகை நடைபெற்றது. இத்தகைய ஆவணங்கள் எதுவும் ஒருபோதும் என்னிடம் வந்ததும் இல்லை, நான் அதில் கையெழுத்து போடவும் இல்லை.

நான் ரெயில்வே மந்திரியாக இருந்த போது எந்த தவறும் செய்யவில்லை. எனது பதவிக்காலத்தில் ரெயில்வேத்துறை மிகவும் லாபகரமாக இயங்கியது.

பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் இந்த நாட்டில் இருந்து அகற்றுவதற்கு நான் முடிவு செய்திருந்தேன். எனவே பா.ஜனதாவுக்கு எதிராக பேசுபவர்களை சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் நிதி மோசடிச்சட்டம் மூலம் அவர்கள் மிரட்டுகிறார்கள். பிரதமர் மோடியின் கட்டளைக்கு கீழ்ப்படிவதில் சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த தவறும் இழைக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார். 

Next Story