விவசாயிகள் தற்கொலையை தடுப்பது அரசின் கடமை சுப்ரீம் கோர்ட்டு கருத்து


விவசாயிகள் தற்கொலையை தடுப்பது அரசின் கடமை சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 8 July 2017 5:15 AM IST (Updated: 8 July 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டியது அரசுகளின் கடமை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

புதுடெல்லி, 

தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, தமிழக அரசு வக்கீல் பி.பாலாஜி, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள (அமிகஸ் கியூரி) சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும், சங்கரநாராயணன் தாக்கல் செய்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, தமிழக அரசு விவசாயிகளின் நலனைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம். 2 வாரங்களில் கூடுதல் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்ய இருக்கிறோம். அரசு, ஒரு வருடம் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடன் வசதி, காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்குதல் போன்ற பல வசதிகளை செய்கிறது என்றார்.

உடனே நீதிபதி தீபக் மிஸ்ரா, விவசாயிகளின் முக்கிய பிரச்சினை, சந்தையில் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்கள் விலையை நிர்ணயம் செய்வது தான். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைகிறார்கள். இடைத்தரகர்களின் செயல்பாட்டை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சங்கரநாராயணன், “தேசிய அளவில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டம் முழுமை அடையும் பட்சத்தில் இடைத்தரகர்களின் செல்வாக்கு தானாக குறையும்” என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆஜரான வக்கீல் என்.ராஜாராமன், “தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டு திட்டம் எந்த பலனையும் அளிக்கவில்லை. கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகள் விவசாயிகளின் கடனை வசூல் செய்வதில் ஜப்தி போன்ற கெடுபிடி செய்கின்றனர். விவசாயிகள் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன” என்றார்.

“இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு வங்கிகள் விவசாயிகளை சிறுமைப்படுத்துவது, மிரட்டுவது, ஜப்தி செய்வது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டியது அரசுகளின் கடமை” என்று நீதிபதி கூறினார்.

தமிழக அரசு தரப்பு வக்கீல், சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சங்கரநாராயணன் தாக்கல் செய்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர். 
1 More update

Next Story