2 நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி


2 நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர்  மோடி
x
தினத்தந்தி 9 July 2017 9:40 AM IST (Updated: 9 July 2017 9:40 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய இருநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லி திரும்பினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து மூன்று நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இஸ்ரேல்- இந்தியா இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவானதையொட்டி பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேல் செல்லும்  முதல் இந்திய பிரதமர் என்பதால் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. 

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சிறப்பு பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. மக்களுக்கிடையேயான சகோதரத்தை ஊக்குவிக்கும் வகையில், மும்பை, டெல்லி - டெல் அவிவ் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.

இதையடுத்து இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றடைந்தார். ஹேம்பர்க் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹேம்பர்க்கில் பல நாடுகளின் முக்கிய தலைவர்களையும் மோடி, சந்தித்து பேசினார். இதில் முக்கியமானதாக ஜி- 20 நாடுகள் மாநாட்டில், இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு உறுதியான ஆதரவு தெரிவித்தன.

ஜி 20 மாநாடுகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று இரவு புறப்பட்ட பிரதமர் மோடி இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். 

Next Story