டெல்லியில் கல்வித்துறையை மின்னணு மயமாக்கும் திட்டத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்
டெல்லியில் நடந்த விழாவில், கல்வித்துறையை மின்னணு மயமாக்கும் திட்டத்தை ஜனாதிபதி தொடங்கிவைத்தார். கல்வி உபகரணங்கள் இலவசம் கல்வியை, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தொலைதூர பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச
புதுடெல்லி,
இதில் ‘சுவயம்’ திட்டத்தின் கீழ் டிஜிட்டல் வகுப்பறை மூலம் படிக்கும் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள், ‘சுவயம்’ இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில் பயின்று சான்றிதழ் பெறலாம். இதனுடன் இலவச வீடியோக்கள் அடங்கிய கல்வி உபகரணங்களும் வழங்கப்படும்.
இதைப்போல ‘சுவயம் பிரபா’ திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே கல்வியை கொண்டு சேர்க்க முடியும். இதன்படி ரூ.1500–க்கு பொருத்தப்படும் டிஷ் ஆன்டெனா மூலம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் 32 டிஜிட்டல் கல்வி சேனல்களை பார்க்க முடியும். இதில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 4 மணி நேரத்துக்கு புதிய பாடங்கள் ஒளிபரப்பாகும். மாணவர்களின் வசதிக்காக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 5 முறை மாறிமாறி ஒளிபரப்பாகும்.இவற்றைத்தவிர ‘தேசிய கல்வி பாதுகாப்பு களஞ்சியம்’ ஒன்றையும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. பல்கலைக்கழங்கள் டிஜிட்டல் முறையில் சேர்த்து வைத்துள்ள கல்வி தொடர்பான பதிவேடுகளை இந்த களஞ்சியத்தில் இருந்து மாணவர்கள் பெற்று பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த 2 மின்னணு திட்டங்கள் மற்றும் களஞ்சியத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று தொடங்கிவைத்தார். டெல்லி விஞ்ஞான பவனில் நடந்த இந்த விழாவில் பேசிய அவர், உயர்கல்வியில் சிறந்த கற்றல் மற்றும் கற்பித்தலை தான் எப்போதும் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.கல்வியின் தரத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையே மிகப்பெரும் வேறுபாடு இருப்பதாக கூறிய ஜனாதிபதி, மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் இப்படிப்பட்ட வேறுபாடு இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிராந்திய மொழிகளிலும் தரமான கல்வி உபகரணங்களை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.