பாவனா கடத்தல் விவகாரம் ‘நான் சிக்கவைக்கப்பட்டு உள்ளேன்’ கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்
பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ‘நான் சிக்கவைக்கப்பட்டு உள்ளேன்’ என கூறிஉள்ளார்.
திருவனந்தபுரம்
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டார். காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இச்சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர். திலீப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட திலீப் பேசுகையில், “நான் குற்றமற்றவன், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். நான் சிக்கவைக்கப்பட்டு உள்ளேன்,” என கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story