நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட வழக்கில் புதிய திருப்பம்


நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட வழக்கில் புதிய திருப்பம்
x
தினத்தந்தி 12 July 2017 4:00 AM IST (Updated: 12 July 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகளை மூடும் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் வகையில், நெடுஞ்சாலைகளை மறுவரையறை செய்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு அங்கு இயங்கி வரும் மதுக்கடைகளே காரணம் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும், நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடி, வருவாய் இழப்பை சந்திக்க சில மாநிலங்கள் விரும்பவில்லை. அதனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நீர்த்துப்போக செய்யும் வகையில், நெடுஞ்சாலைகளை ‘மாவட்ட சாலைகள்’ என்பது உள்ளிட்ட பெயர்களில் மறுவரையறை செய்தன.

சண்டிகார் நிர்வாகமும் அதுபோல் நகர எல்லைக்குள் வரும் நெடுஞ்சாலை பகுதிகளை மறுவரையறை செய்தது. அதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சண்டிகாரை சேர்ந்த ஒரு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

தள்ளுபடி

அந்த மனு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர் ராவ், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அவர்கள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:–

நகர எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலை பகுதிகள் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் முந்தைய உத்தரவு எவ்வகையிலும் மீறப்படவில்லை. நகர எல்லைக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலை பகுதிகளை மறுவரையறை செய்திருந்தால்தான், அது சட்டவிரோதமாக கருதப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

1 More update

Next Story