தேர்தல் கமிஷனில் மைத்ரேயன் எம்.பி. புகார்
‘அ.தி.மு.க. (அம்மா) அணி அளித்த பிரமாண பத்திரங்களில் பெரும்பாலானவை போலியானவை’ என மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்தல் கமிஷனில் புகார் மனு அளித்தனர்.
புதுடெல்லி,
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. முடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தை பெற, இரு அணியினரும் போட்டி போட்டு தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 805 பிரமாண பத்திரங்களும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் 3 லட்சத்து 80 ஆயிரம் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே தீபா பேரவையினர் 5 லட்சத்து 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதனை ஆய்வு செய்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், அ.தி.மு.க. (அம்மா) அணியினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை குறைகூறி ஒரு புகார் மனுவை சமர்ப்பித்தனர்.பின்னர் இது தொடர்பாக நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:–
சில தினங்களுக்கு முன்பு சசிகலா அணியினர் மேலும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு உள்ளனர். அதை ஏற்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் கூறியிருக்கிறோம். வேண்டுமென்றே அவர்கள் காலதாமதம் ஏற்படுத்துகிறார்கள்.அவர்கள் அளித்த பிரமாண பத்திரங்களில் பெரும்பாலானவை போலியாக கையெழுத்து போடப்பட்டு உள்ளது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் தேர்தல் கமிஷனில் கொடுத்து, உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்து இருக்கிறோம்.
பத்திரத்தில் ஒருவர் பெயர் இருக்கிறது. ஆனால் கையெழுத்து மற்றொருவர் போட்டிருக்கிறார். எனவே போலி ஆவணங்களை கொடுத்தவர்கள் மீதும், கையெழுத்து போட்டவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இந்த போலி பத்திரங்களை தேர்தல் கமிஷனில் நாங்கள் முறைப்படி கேட்டு பெற்றுக்கொண்டோம்.
சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக போலீஸ் டி.ஐ.ஜி.யே குற்றம் சாட்டியிருக்கிறார். கர்நாடக காங்கிரசை பயன்படுத்தி அவர் வசதிகளை பெற்றாரா? என்பதுதான் எனது சந்தேகம். ஆர்.கே.நகர் தேர்தலில் லஞ்சம், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம், தற்போது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் என சசிகலா குடும்பம் மீது லஞ்ச புகார் நீள்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், ‘பொது செயலாளர் பதவி கிடைத்தால் அ.தி.மு.க.வில் இணையலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுத்திருப்பதாகவும், அதை உங்களை (மைத்ரேயன்) போன்ற சிலர்தான் தடுப்பதாகவும் செய்திகள் வருகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மைத்ரேயன் பதில் அளிக்கையில், ஊடகங்கள்தான் அப்படி கூறுகின்றன. ஓ.பன்னீர்செல்வம் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.
மேலும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டதற்கு, ‘ஜெயக்குமார் யார்? அவர் ரோட்டில் போகிறவர். எடப்பாடி பழனிசாமி அப்படி கூறவில்லையே’ என்றார்.