கோவாவில் புனித சிலுவை சேதம்; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
தெற்கு கோவாவில் நேற்றிரவு புனித சிலுவை மர்ம நபர்களால் சேதம் அடைந்ததனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவாவில் கடந்த 2 வாரங்களில் மத சின்னங்களின் மீது எண்ணற்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் குறிப்பிடும்படியாக கிறிஸ்தவ மதத்தினை இலக்காக கொண்டு அதிக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூலை 1ந்தேதியில் இருந்து தெற்கு கோவா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் 12 சிலுவைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கோவில் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு தெற்கு கோவாவின் மர்காவ் பகுதியில் கல்கோண்டா என்ற இடத்தில் புனித சிலுவை ஒன்று சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி மர்காவ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.எல். பட்டீல் கூறும்பொழுது, நேற்றிரவு தெற்கு கோவாவில் கனமழை பெய்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியிலுள்ள விளக்குகள் அணைந்துள்ளன. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சிலுவையை சேதப்படுத்தி உள்ளனர் என தெரிகிறது என கூறியுள்ளார்.
கோவாவில் நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ள கோவா சர்ச் நிர்வாகம், மத சகிப்பு தன்மை கொண்ட மாநிலத்தில் மதமோதல்களை தூண்டி விடுவதற்காக இதுபோன்ற விசயங்கள் நடப்பது போல் உணருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் காவல் துறை அதிகாரிகளுடன் இந்த சம்பவம் பற்றி விவாதிக்க உயர் மட்ட கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைத்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.