செல்பி சோ(மோ)கம்; பஞ்சாப் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட டீன் ஏஜ் பெண்கள்
பஞ்சாபில் கால்வாய் ஒன்றின் முன் செல்பி எடுத்தபொழுது தவறி விழுந்த மொபைல் போனை எடுக்க சென்று 2 டீன் ஏஜ் பெண்கள் இன்று உயிரிழந்தனர்.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் கஹ்னுவான் பகுதியில் சத்தியாலி என்ற கால்வாய் உள்ளது. அந்த வழியே நடந்து சென்ற டீன் ஏஜ் வயதுடைய 2 பெண்கள் அதன் முன் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளனர்.
இந்நிலையில், செல்பி எடுத்த பெண்ணின் கையில் இருந்த மொபைல் போன் தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளது. உடனே, போனை எடுக்க கால்வாய்க்குள் அவர் இறங்கியுள்ளார்.
ஆனால் நீரோட்டம் அதிகம் இருந்த நிலையில் அவர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக அருகிலிருந்த மற்றொரு பெண்ணும் கால்வாய்க்குள் குதித்து உள்ளார். ஆனால் அவரும் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டார்.
அவர்கள் இருவரும் நிஷா (வயது 18) மற்றும் லவ்பிரீத் (வயது 17) என தெரிய வந்துள்ளது. பஞ்சாபில் சத்தியாலி என்ற கிராமத்தினை சேர்ந்த இவர்கள் மாணவிகளாவர்.
இவர்களுடன் துணைக்கு சென்ற 14 வயது சிறுமி இந்த சம்பவம் பற்றி அந்த பெண்களின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீச்சல் வீரர்கள் நீருக்குள் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ நீச்சல் வீரர்களும் உதவிக்கு வர கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என போலீசார் கூறினர்.