உ.பி.யில் ரெயிலில் இஸ்லாமிய குடும்பம் மீது கொடூரக் கும்பல் தாக்குதல், கொள்ளையடிப்பு


உ.பி.யில் ரெயிலில் இஸ்லாமிய குடும்பம் மீது கொடூரக் கும்பல் தாக்குதல், கொள்ளையடிப்பு
x
தினத்தந்தி 14 July 2017 6:12 PM IST (Updated: 14 July 2017 6:11 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் ரெயிலில் இஸ்லாமிய குடும்பம் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.



லக்னோ,

மெயின்புரி மாவட்டத்தில் புதன் கிழமை மாலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இஸ்லாமிய குடும்பம் சிகோகாபாத் - காஸ்காஞ் பயணிகள் ரெயிலில் வீட்டிற்கு திரும்பி உள்ளது. அப்போது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊணமுற்ற சிறுவன் என இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மீது கொடூரக் கும்பல் தாக்குதலை நடத்தி உள்ளது. மோடா மற்றும் நிப்காரோரி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது அவர்களை 35-30 பேர் கொண்ட கொடூரக்கும்பல் கொடூரமான முறையில் தாக்கிஉள்ளது. 
இரும்பு கம்பியை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ரெயிலின் அவசரகால கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே செல்லும் கும்பல் இஸ்லாமிய குடும்பத்தை தாக்கி உள்ளது. பருக்காபாத் ரெயில் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ரெயில்வே போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளது.

பாதிக்கப்பட்ட முகமது ஷாகிர் (வயது 50) பேசுகையில், என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத கொடூரமான சம்பவம். எங்களை இரும்பு கம்பியை கொண்டு தாக்கினார்கள். எங்களுடைய பொருட்களை கொள்ளையடித்துவிட்டனர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். என்னுடைய ஊணமுற்ற 17 வயது மகனையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை என கூறிஉள்ளார். அவர்களை கொல்லுங்கள், அவர்கள் இஸ்லாமியர்கள் என தொடர்ந்து எங்களை அடிக்கும் போது கத்திக் கொண்டு இருந்தார்கள், நாங்கள் சுயநினைவை இழக்கும் வரையில் தாக்கினார்கள் என்றும் கூறிஉள்ளார். 

அவருடைய மகன் பேசுகையில், அவர்கள் என்னுடைய தயார் மற்றும் சகோதரியை மானபங்கம் செய்தனர். அவர்கள் தங்க நகையை பறித்துக் கொண்டனர். அவர்கள் எங்களை காப்பாற்ற வந்த பயணிகளையும் தாக்கினர் என கூறிஉள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் ரெயில்வே போலீஸ் சிறப்பு படையை அமைத்து உள்ளது. மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Next Story