பீகார் அரசியலில் உச்ச கட்ட குழப்பம்: நிதிஷ் குமார் நிகழ்ச்சியை புறக்கணித்த தேஜஸ்வி யாதவ்


பீகார் அரசியலில் உச்ச கட்ட குழப்பம்: நிதிஷ் குமார் நிகழ்ச்சியை புறக்கணித்த தேஜஸ்வி யாதவ்
x
தினத்தந்தி 15 July 2017 3:31 PM IST (Updated: 15 July 2017 3:31 PM IST)
t-max-icont-min-icon

பீகார் முதல் மந்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் புறக்கணித்த சம்பவம் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கின. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களிலும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்–மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் ஓட்டல் நிலம் பேர ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது இந்த விவகாரம் இரு கட்சியினரிடையே மோதலை உருவாக்கி உள்ளது. தேஜஸ்வி யாதவ் தன்னுடைய துணை முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தன் மீதான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதே சமயம் தங்களிடம் 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று ராஷ்டிரீய ஜனதா தள மாநில தலைவர் ராம்சந்திர பூர்வே கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களிடம் 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற அகந்தையில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி செயல்படக்கூடாது. இதற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி வெறும் 22 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது. கடந்த தேர்தலில் ஊழல் கரை படாத நிதிஷ்குமாருடன் இணைந்ததால் தான் 80 இடங்களை அக்கட்சி பெற்றுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. தேஜஸ்வி யாதவ் முதலில் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கட்டும் என்றார்.

இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு கருத்து தெரிவித்து வருவதால் ஆளும் ராஷ்டிரீய ஜனதா தளம்–ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்லும் நிலையில்,  பாட்னாவில்  இன்று அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதன்படி, இருக்கையில் தேஜஸ்வி யாதவ் பெயர்ப்பலகையும் இடம் பெற்றிருந்தது.  அனால், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக அவரது பெயர், முதலில் மறைக்கப்பட்டு பின்னர் பெயர் முற்றிலுமாக நீக்கப்பட்டது. நிதிஷ் குமார் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதல் மந்திரி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தேஜஸ்வி யாதவ் புறக்கணித்ததன் மூலம் இரு கட்சிகளிடையே விரிசல் அதிகரித்துருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் பீகார் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது.

Next Story