கோலார், மாலூர் தாலுகாக்களில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை


கோலார், மாலூர் தாலுகாக்களில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை
x
தினத்தந்தி 17 July 2017 4:12 AM IST (Updated: 17 July 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

கோலார், மாலூர் தாலுகாக்களில் கடந்த 3 மாதங்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

கோலார் தங்கவயல்,

கோலார், மாலூர் தாலுகாக்களில் கடந்த 3 மாதங்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

கோலார் தாலுகா அரபிகொத்தனூர், நாகேநாலா, மாலூர் தாலுகா அலேபாளையா போன்ற கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளன. இதனால் வனப்பகுதிக்குள் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அரபிகொத்தனூர், நாகேநாலா, அலேபாளையா ஆகிய 3 கிராமங்களுக்குள் புகுந்து ஒரு சிறுத்தை தொடர் அட்டகாசம் செய்து வந்தது. மேலும் விவசாயிகள் வீடுகளின் முன்பு கட்டி போட்டு இருந்த ஆடு, மாடு, கோழிகளை அடித்து கொன்றும் வந்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று, கோலார் மாவட்ட வனத்துறை அதிகாரி ராமலிங்கேகவுடாவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அரபிகொத்தனூர், நாகேநாலா, அலேபாளையா ஆகிய 3 கிராமங்களிலும் 10 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் அந்த கூண்டுகளிலும் நாயையும் வனத்துறையினர் கட்டிப்போட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதிக்குள் இருந்து இரைத்தேடி அரபிகொத்தனூர் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கூண்டில் வசமாக சிக்கிக் கொண்டது.

சிறுத்தை கூண்டில் சிக்கியது குறித்து அறிந்த அரபிகொத்தனூர் கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்ப்பதற்காக நாகேநாலா, அலேபாளையா கிராம மக்களும் அங்கு குவிந்தனர். சிலர் சிறுத்தையை செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர். அதன்பின்னர் சிறுத்தையை, லாரியில் ஏற்றி கோலாரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரி ராமலிங்கேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பிடிபட்ட சிறுத்தை 10 வயது நிரம்பிய ஆண் சிறுத்தையாகும். இன்று(அதாவது நேற்று) மாலை சிறுத்தை, மைசூரு மாவட்டம் நாகரஒலேயில் உள்ள சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

கடந்த 3 மாதங்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அரபிகொத்தனூர், நாகேநாலா, அலேபாளையா ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.



Next Story