டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்தவர் நிதின் குமார். இவர் நேற்று முன்தினம் காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டெல்லி செங்கோட்டையில் இன்னும் சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்மநபர் ஒருவர் தன்னிடம் போன் மூலம் தெரிவித்ததாகவும், அந்த நபர் பாகிஸ்தானில் இருந்து பேசியதாகவும் தகவல் கொடுத்தார்.
கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வெடிகுண்டு பொருத்தி வைக்கப்பட்டுள்ளது என அந்த நபர் தெரிவித்ததாகவும் நிதின் குமார் கூறினார். இதையடுத்து செங்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று போலீசார் விசாரித்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பீகார் மாநிலத்தை சேர்ந்த மெஹ்புஷ் (வயது 22) என்பதும் அந்த ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
விளையாட்டுத்தனமாக போன் செய்து பேசியதாக மெஹ்புஷ் போலீசாரிடம் தெரிவித்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.