சிறை விதிகளை பின்பற்றியே சஞ்செய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்: மராட்டிய அரசு விளக்கம்


சிறை விதிகளை பின்பற்றியே சஞ்செய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்: மராட்டிய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 17 July 2017 3:21 PM IST (Updated: 17 July 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

சஞ்செய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறை விதிமுறைகளே பின்பற்றப்பட்டது என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. ஏற்கனவே சிறையில் 1½ ஆண்டை கழித்த நிலையில், எஞ்சிய 3½ ஆண்டுகள் சிறை தண்டனைக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் மீண்டும் சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவர் பல முறை பரோல் விடுப்பில் அனுமதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் மராட்டிய அரசு  அறிவித்தது. அதன்படி விடுதலையும் செய்யப்பட்டார். 8 மாதங்கள் அவரது தண்டனை காலம் இருந்தபோதும், அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது. இதனையடுத்து சஞ்சய் தத் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மும்பை  உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை நியாயப்படுத்துமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டது.

சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து பிரமாணப்பத்திரத்தை  தாக்கல் செய்ய மராட்டிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று, மும்பை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மராட்டிய அரசு, சஞ்செய் தத் விவகாரத்தில்  சிறை விதிகள் அனைத்தும் உரிய முறையில் பின்பற்றப்பட்டதாக  தெரிவித்துள்ளது. மேலும், சஞ்செய் தத்தின் தண்டனை குறைப்பு கணக்கிட்டது எவ்வாறு என்பதற்கான விவரங்களையும் மராட்டிய அரசு  நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளது. 

Next Story