துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டி


துணை ஜனாதிபதி பதவிக்கு  வெங்கையா நாயுடு போட்டி
x
தினத்தந்தி 18 July 2017 5:30 AM IST (Updated: 18 July 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

துணை ஜனாதிபதியை எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுப்பார்கள். பாராளுமன்றத்தில் உள்ள நியமன எம்.பி.க்கள் இருவர் உள்பட 545 உறுப்பினர்கள் மற்றும் டெல்லி மேல்-சபையில் உள்ள நியமன எம்.பி.க்கள் 12 பேர் உள்பட 245 உறுப்பினர்கள் என மொத்தம் 790 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

வெங்கையா நாயுடு தேர்வு

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.

ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போது மத்திய தகவல் ஒலிபரப்பு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரியாக இருக்கும் வெங்கையா நாயுடு தேர்ந்து எடுக்கப்பட்டார். கூட்டம் முடிந்ததும் அமித்ஷா இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

68 வயது ஆகும் வெங்கையா நாயுடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இன்று மனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, கடைசி நாளான இன்று காலை 11 மணிக்கு தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்கிறார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தியும் இன்று தனது மனுவை தாக்கல் செய்கிறார்.

பிரதமர் மோடி கருத்து

பாரதீய ஜனதா கூட்டணியின் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்ந்து எடுக்கப்பட்டது பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு மிகவும் பொருத்தமானவர் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

Next Story