எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 19 July 2017 4:15 AM IST (Updated: 19 July 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில், பசு காவலர்கள் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, கர்நாடகத்தில் சசிகலா விவகாரத்தில் உயர் அதிகாரியின் திடீர் இடமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன.

சபை கூடியதுமே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்திக்கொண்டும், கோஷங்களை எழுப்பிக்கொண்டும் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர்.

‘விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்சினையில் இருந்து கவனத்தை திசை திருப்பத்தான் பசு பாதுகாப்பு’, ‘விவசாயிகளை ஓலமிட வைத்து விட்டு, விஜய் மல்லையாவை நாட்டை விட்டு தப்பி ஓட அனுமதித்துவிட்டனர்’ என்பது போன்ற வாசகங்கள் அந்த அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டபோது, அவர்களுக்கு பதிலடி தருவதுபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா உறுப்பினர்கள் நேர்மையான அதிகாரிகளை கர்நாடக காங்கிரஸ் அரசு பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

சசிகலா விவகாரத்தில் டி.ஐ.ஜி. ரூபா அதிரடியாக இடமாற்றம் செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டும் கோஷங்கள் கொண்ட அட்டைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் தங்கள் இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அமளியில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களையும் அமைதி காக்குமாறும், தங்கள் இருக்கைகளுக்கு சென்று அமருமாறும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து அவர் சபையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

மீண்டும் சபை கூடியபோதும், ஏற்கனவே அமளியில் ஈடுபட்ட கட்சிகளுடன் புதிதாக ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைந்தன. அந்தக் கட்சிகளின் எம்.பி.க்களின் தொடர் கோஷங்களால் சபையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதற்கு மத்தியில் இந்திய பெட்ரோலிய நிறுவன மசோதா, எரிசக்தி மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை அரசு சார்பில் அறிமுகம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து சபையை நடத்த முடியாத சூழல் உருவானபோது, நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

மாயாவதி ஆவேசம்

மேல்-சபையில், உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை விவகாரத்தைப் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசமாகப் பிரச்சினை எழுப்பினார்.

அவரை 3 நிமிடத்தில் பேச்சை முடிக்குமாறு சபை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் கூறியபோது அவர் கொதித்துப்போனார். எதிர்ப்பு தெரிவித்தார். சபையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். 

ஆனால் அவர்கள் அனைவரும் பின்னர் சபைக்கு வந்து, அரசின் தலித் விரோத கொள்கைகளுக்கு எதிராக கோஷங்களை முழங்கினர். இந்த அமளி தொடர்ந்ததால் சபையை முதலில் நண்பகல் வரைக்கும், பின்னர் 2 மணி வரைக்கும் குரியன் ஒத்திவைத்தார்.

2 மணிக்கு சபை கூடியபோதும் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தபோது, 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு கூடியபோது, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு பல்வேறு பிரச்சினைகளில் கோஷம் போட்டனர். அதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மொத்தத்தில் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நேற்று எந்தவிதமான அலுவலையும் நடத்தமுடியாதபடிக்கு முடங்கின. 

Next Story