எம்.பி. பதவி ராஜினாமா; உ.பி.யில் பாரதீய ஜனதாவிற்கு தன்னுடைய பலத்த காட்ட மாயாவதி திட்டம்?
மேல்-சபை எம்.பி.யை ராஜினாமா செய்த மாயாவதி பாரதீய ஜனதாவிற்கு தன்னுடைய பலத்தை காட்ட தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவகாரம் குறித்து, டெல்லி மேல்-சபையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று பிரச்சினை எழுப்பி ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர், தனது பேச்சை 3 நிமிடத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் என்று சபையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறினார். உடனே மாயாவதி கொந்தளித்தார். அவர் குரியனை நோக்கி, “எனது சமூகத்தைப் பற்றிய பிரச்சினையை நான் எழுப்புகிறபோது எப்படி தடுக்கிறீர்கள்? நான் என் பேச்சை முடிக்கவில்லை.
தலித்துகளுக்கு எதிராக அரங்கேற்றப்படுகிற வன்கொடுமைகளைப் பற்றி நான் பேச அனுமதிக்கப்படாதபோது, இந்த சபையில் இருக்கிற தார்மீக உரிமை எனக்கு இல்லை” என்றார். பின்னர் கோபமாக வெளியேறிய மாயாவதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பாரதீய ஜனதா பலமாக இருக்கும் உத்தரபிரதேசத்தில் மாயாவதி தன்னுடைய பலத்தை காட்டுவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என கூறப்படுகிறது. நேரடியாக உத்தரபிரதேசத்தில் தேர்தலியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மாயாவதிக்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பால்பூர் தொகுதியாக இருந்த எம்.பி. மவுரியா மாநில துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். பால்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மாற்றொரு வாய்ப்பு யோகி ஆதித்யநாத்தை எதிர்க்கொள்வது.
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்தவர். மாநில முதல்-மந்திரியாக அவர் பதவியேற்று உள்ளார், இருவரும் 6 மாதங்களில் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும்.
மேல் சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து உள்ள மாயாவதி பேசுகையில் தேர்தலை சந்திப்பதற்கு எந்தஒரு அச்சமும் இல்லை என்பதையும் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், நான் 4 முறை முதல்-மந்திரியாக இருந்தேன். தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று உள்ளேன். எம்.எல்.ஏ. தேர்தல்களிலும் வெற்றி பெற்று உள்ளேன். தேவைப்படும் போது மட்டும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து உள்ளேன், என்றார்.
பெரும்பாலும் மாயாவதி நேரடி தேர்தல்களை சந்திப்பது கிடையாது. 2007-ம் ஆண்டு உ.பி.யில் முதல்-மந்திரியான போது அம்மாநில மேல் சபை உறுப்பினர் ஆனார். 2012-ல் சமாஜ்வாடியிடம் தோல்வியடைந்த பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அவருடைய பதவி காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையில் உள்ளது. தேர்தல்களில் படுதோல்விகளை சந்தித்து உள்ள மாயாவதி கட்சிக்கு அவரை மீண்டும் நியமன உறுப்பினராக நியமனம் செய்ய வலுவான எண்ணிக்கையில் இல்லை. இந்நிலையில் மாநில இடைத்தேர்தலில் நேரடி தேர்தலை அவர் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
பாரதீய ஜனதாவிற்கு எதிராக அனைத்து கட்சிகளில் வியூகம் இப்போதே தொடங்கி உள்ளது. பா.ஜனதாவிற்கு ஒருங்கிணைந்த எதிர்ப்பு என்ற முறையில் மெகா கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என பார்க்கப்படுகிறது. மாயாவதி ஏதாவது தொகுதியில் நேரடியாக களமிறங்கினால் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது.
2019-ல் பாரதீய ஜனதாவிற்கு எதிரான மகா கூட்டணியின் அஸ்திவாரமாக மாயாவதியை களமிறக்குவது இருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story