ரூ.2 கோடி லஞ்ச புகார் தற்போது எதுவும் கூற முடியாது விசாரணை அதிகாரி வினய்குமார் பேட்டி


ரூ.2 கோடி லஞ்ச புகார்  தற்போது எதுவும் கூற முடியாது விசாரணை அதிகாரி வினய்குமார் பேட்டி
x
தினத்தந்தி 19 July 2017 6:31 PM IST (Updated: 19 July 2017 6:31 PM IST)
t-max-icont-min-icon

பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி வினய்குமார் தற்போது எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதை அதே துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் முழுவதுமாக மறுத்தார்.

இந்த நிலையில் ரூபா மற்றும் சத்திய நாராயணராவ் ஆகிய 2 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர் தனது விசாரணையை தொடங்கி உள்ளார்.

இந்தநிலையில், முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், விசாரணை அதிகாரி வினய்குமாரை சந்தித்து 2 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், சத்திய நாராயணராவ் மற்றும் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தவறான புரிதல்கள், மோதல்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளதாக சொல்லப்படுகிறது.

விசாரணை குறித்து வினய்குமாரிடம் நிருபர்கள் நேற்று கேட்டனர். ஆனால் விசாரணை குறித்து எதுவும் பேச மறுத்த அவர், “தற்போதைக்கு எந்த தகவலையும் கூற முடியாது. தேவைப்பட்டால் ஊடகங்களிடம் பேசுவேன்” என்று கூறி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் 2-வது நாளாக பரப்பன அக்ரஹார சிறையில் 2 மணிநேரம் விசாரணை நடத்திய பின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார்  செய்தியார்களிடம் கூறுகையில்,

ரூபா குற்றச்சாட்டு தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம், தற்போது எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story