காவிரி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடுவர்மன்ற தீர்ப்பு பாரபட்சமானது கர்நாடக வக்கீல் வாதம்
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் நேற்று 5-வது நாளாக கர்நாடக அரசின் வாதம் தொடர்ந்தது. .
புதுடெல்லி,
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 5-வது நாளாக விசாரணை தொடர்ந்தது.
கர்நாடக அரசின் சார்பில் மூத்த வக்கீல் மோகன் கர்த்தார்க்கி நேற்று 5-வது நாளாக தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 24 லட்சம் ஹெக்டேர் பகுதியில் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் 22 லட்சம் ஹெக்டேரில் நெல் மட்டுமே விவசாயம் செய்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் செலவாகிறது. மீதம் உள்ள 2 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பிற பயிர்களை பயிரிடுகிறார்கள். காவிரி ஒப்பந்தத்தின்படி அணைகள் கட்டிக் கொள்ள கர்நாடகத்துக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால் ஏதாவது அணை தொடர்பான பணியை தொடங்கினாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகம் கூட பவானி, அமராவதி ஆகிய அணைகளை கட்டியது.
அவர் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வக்கீல் ஜி.உமாபதி, “காவிரி ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் அணைகள் கட்டிக் கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உறுதி செய்து முழுமையாக வழங்க வேண்டும். அந்த உரிமையைத்தான் நாங்கள் கோரிக்கையாக முன்வைத்து வருகிறோம்” என்று கூறினார்.
கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் ஷியாம் திவான் வாதாடுகையில், தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீரின் அளவை கருத்தில் கொள்ளாமல் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும், கர்நாடகத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல் மிகவும் பாரபட்சமாக தீர்ப்பு கூறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story