காதல் திருமணம் செய்துகொண்ட இந்தி நடிகை பிதிஷா தற்கொலை கணவர் கைது


காதல் திருமணம் செய்துகொண்ட இந்தி நடிகை பிதிஷா தற்கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 20 July 2017 5:04 AM IST (Updated: 20 July 2017 5:04 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்துகொண்ட இந்தி நடிகை பிதிஷா கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குர்கான்,

பிரபல இந்தி நடிகை பிதிஷா (வயது 30). அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். பாடகியாகவும் இருந்து வந்தார்.

ரன்பீர் கபூர், கத்ரினா கைப் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘ஜக்கா ஜசூஸ்’ என்ற இந்தி படத்தில் பிதிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பிதிஷாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நிஷித் ஜா என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி இருவரும் மும்பையில் வசித்து வந்தனர்.

அடிக்கடி தகராறு

சமீபத்தில் அவர்கள் இருவரும் அரியானா மாநிலம் குர்கானில் குடியேறினர். பிதிஷாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும் நிஷித் ஜாவின் குடும்பத்தினர் பிதிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிதிஷா விவாகரத்து பெற்று கணவரிடம் இருந்து பிரிந்து செல்ல திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிதிஷாவின் தந்தை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பிதிஷா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

கணவர் கைது

அதன்பேரில் போலீசார் பிதிஷா வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது வீட்டினுள் மின்விசிறியில் பிதிஷா தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடிகை பிதிஷாவின் தந்தை, நிஷித் ஜா மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நிஷித் ஜாவை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story