சண்டை காட்சியில் வாள் குத்தியது நடிகை கங்கனா ரணாவத்துக்கு ‘ஆபரேஷன்’


சண்டை காட்சியில் வாள் குத்தியது நடிகை கங்கனா ரணாவத்துக்கு ‘ஆபரேஷன்’
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

நடிகை கங்கனா ரணாவத் சண்டை காட்சியில் நடித்தபோது நெற்றியில் வாள் குத்தி படுகாயம் அடைந்தார். அவரது நெற்றியில் அறுவை சிகிச்சை செய்து 15 தையல்கள் போடப்பட்டன.

மும்பை,

‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். இதில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வாள் குத்தியது

வில்லன்களுடன் கங்கனா ரணாவத் வாள் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்கினர். கங்கனா ரணாவத் உண்மையான வாளை கையில் வைத்து சண்டை போட்டார்.

அப்போது அவரை எதிர்த்து சண்டை போட்டவரின் வாள் எதிர்பாராத விதமாக கங்கனா ரணாவத்தின் நெற்றியில் குத்தியது. இதனால் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது. கங்கனா ரணாவத் மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தார்.

படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கங்கனா ரணாவத்தை தூக்கிச்சென்றனர். அங்கு கங்கனாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது. நெற்றியில் 15 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருக்கிறார். இன்னும் 2 வாரங்கள் ஆஸ்பத்திரியிலேயே அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தயாரிப்பாளர்

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் கூறும்போது, “நன்றாக பயிற்சி எடுத்த பிறகே இந்த சண்டை காட்சியில் கங்கனா ரணாவத் பங்கேற்று நடித்தார். ஆனால் அவருடன் சண்டைபோட்டவர் வீசிய வாள் எதிர்பாராத விதமாக நெற்றியில் குத்திவிட்டது” என்றார். 

Next Story