ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தது குறித்து ஆலோசனை நடத்தப்படும்: காங்கிரஸ்
ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்தனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்குப்பதிவின் முடிவில் சுமார் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ராம்நாத்கோவிந்த் வெற்றி பெற்றார்.
ஜனாதிபதி தேர்தலில் கொறடா உத்தரவு எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்தாது என்பதால் திரிபுரா, டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்து இருப்பது ஓட்டு எண்ணிக்கையின் போது தெரியவந்தது. திரிபுரா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். தோராயமாக 100 எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கட்சி மாறி ராம்நாத்கோவிந்த்திற்கு வாக்களித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி ஓட்டுபோட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்துவோம் என்று அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பங்கஜ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். கட்சி மாறி வாக்கு அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாரதீய ஜனதா கூறுகையில், “ இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை என்பதை காட்டுகிறது. நாட்டின் நலனை விரும்பிய தலைவர்கள் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story