பசு பாதுகாப்பு என்று தாக்குதல் நடத்துவோரை பாதுகாக்கக் கூடாது -சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
புதுடெல்லி,
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் சில இடங்களில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சமூக செயல்பாட்டாளர் டி.எஸ்.பூனாவாலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் ஒரு சிலர் பசுக்களை காப்பதாக கூறிக்கொண்டு மனிதர்கள் மீது தாக்கல் நடத்தியும், சில நேரங்களில் கொலைச் செயல்களில் ஈடுபட்டும் சமூக சீர்குலைவை ஏற்படுத்தி வருகின்றனர்.
நடவடிக்கை தேவை
தங்களை பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் தலித்துகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சமூகத்தில் ஒருமைப்பாடு, பொது ஒழுக்கம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு விசாரணை
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், ஜார்கண்ட், மராட்டியம், கர்நாடக மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் சிங் வாதாடுகையில் கூறியதாவது:-
மத்திய அரசு அனுமதிக்காது
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் மனிதர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலைகளை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளது. இதுபோன்ற வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் சட்டத்தில் இடமில்லை. தனி மனிதர்களின் இதுபோன்ற அத்துமீறல்களை மத்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே பாராளுமன்றத்தில் மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில் ஒவ்வொரு மாநில அரசும் இதுபோன்ற தாக்குதல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பல இடங்களில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாக்கக்கூடாது
ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களின் தரப்பில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்று மத்திய அரசு கூறுகிறது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவோர் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீது மத்திய அரசும் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை பாதுகாக்கக்கூடாது. எந்த வகையான வன்முறை சம்பவங்களையும் அனுமதிக்கக்கூடாது.
பசு பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நபர்கள் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள கருத்துகள் மற்றும் படங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரமாண பத்திரம்
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு மற்றும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட மாநில அரசுகள் பிரமாண பத்திரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
பின்னர் அவர்கள் வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story