பிரிவுபசார விழாவில் பிரணாப் முகர்ஜி உருக்கமான பேச்சு ‘‘வானவில் நினைவுகளுடன் விடைபெறுகிறேன்’’


பிரிவுபசார விழாவில் பிரணாப் முகர்ஜி உருக்கமான பேச்சு ‘‘வானவில் நினைவுகளுடன் விடைபெறுகிறேன்’’
x
தினத்தந்தி 23 July 2017 11:30 PM GMT (Updated: 2017-07-24T02:26:20+05:30)

பிரிவுபசார விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‘‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’’ என்று உருக்கமாக கூறினார்.

புதுடெல்லி,

பிரிவுபசார விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‘‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’’ என்று உருக்கமாக கூறினார்.

நாட்டின் 13–வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளை (25–ந்தேதி) நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்க உள்ளார்.

இதையொட்டி, பிரணாப் முகர்ஜிக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பிரிவுபசார விழா நடத்தப்பட்டது.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரிவுபசார விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் இந்த பாராளுமன்றத்தால்தான் உருவாக்கப்பட்டேன். இந்த பாராளுமன்றம்தான், எனது அரசியல் கண்ணோட்டம், ஆளுமையை வடிவமைத்தது.

48 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த புனிதமான அமைப்பின் நுழைவாயில்களில் நான் நுழைந்தபோது எனக்கு 34 வயதுதான். 1969 ஜூலை மாதம், நான் இந்த பாராளுமன்றத்துக்கு, மேற்கு வங்காள மாநிலத்தின் சார்பில் மேல்–சபை உறுப்பினராக வந்தேன். நான் முதன்முதலாக 1969–ம் ஆண்டு, ஜூலை மாதம் 22–ந்தேதி நடந்த கூட்டத் தொடரில்தான் முதல்முறையாக கலந்துகொண்டேன்.

அதில் இருந்து நான் 37 ஆண்டு காலம் பாராளுமன்ற மக்களவை, மேல்–சபை உறுப்பினராக பணியாற்றி உள்ளேன். இவற்றில் 5 முறை மேல்–சபை எம்.பி.யாகவும், 2 முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளேன்.

என் நீண்ட வாழ்க்கை பயிற்றுவிப்பையும், கற்பதையும் கொண்டது. நான் பாராளுமன்றத்தில் நுழைந்தபோது, மேல்–சபை முற்றிலும் அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற வாதிகளையும், சுதந்திரப்போராட்ட வீரர்களையும் கொண்டிருந்தது.

பாராளுமன்றத்தில், பி.வி. நரசிம்மராவின் விவேகம், வாஜ்பாயின் பேச்சாற்றல், டாக்டர் மன்மோகன்சிங்கின் அமைதி, அத்வானியின் முதிர்ந்த அறிவுரை, சோனியா காந்தியின் ஆர்வமுள்ள ஆதரவு என்னை மெருகேற்றின.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி இந்திரா காந்தியால் வழிநடத்தப்பட்டேன். அவரது உறுதி, சிந்தனை, தெளிவான செயல்கள், உயர்ந்த ஆளுமை அவரை உயர்த்தியது.

அந்த நாட்களில், பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் சமூகம் மற்றும் நிதி சட்டங்களுக்கான தெளிவான விவாதங்கள் நடைபெற்றன. பிரபலங்களின் பேச்சுகளை ஆளுங்கட்சி வரிசையில் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கேட்டிருக்கிறேன். அப்போது, நிலைத்து நிற்கும் இந்த பாராளுமன்றத்தின் ஆன்மாவை உணர்ந்தேன். விவாதத்தின் உண்மையான மதிப்பை புரிந்தேன்.

பாராளுமன்ற மக்களவையின் 543 உறுப்பினர்கள், மேல்சபையின் 245 உறுப்பினர்கள என 788 பேரின் குரலும் முக்கியம். சட்டங்களை இயற்றுவதற்கு ஒதுக்குகிற நேரம் குறைந்து வருவது துரதிர்ஷ்டவசமானது. பாராளுமன்றம் சட்டம் இயற்றுகிற பங்களிப்பை செய்ய தவறுகிறபோது அல்லது விவாதமின்றி சட்டம் இயற்றுகிறபோது, இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் நம்மீது வைத்த நம்பிக்கையை மீறுவதாக நான் உணர்கிறேன்.

பாராளுமன்றம் கூடாதபோது, அவசர சட்டம் இயற்றுகிற அதிகாரத்தை அரசு கொண்டுள்ளது.

ஆனால் அவசர சட்டங்களை கட்டாயமான சூழ்நிலைகளில் மட்டுமே கொண்டு வர வேண்டும். பண விவகாரங்களில் அவசர சட்டம் கூடாது.

2012–ம் ஆண்டு, ஜூலை மாதம் 22–ந்தேதி நான் 13–வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டபோது என் பாராளுமன்ற உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்தது. 37 ஆண்டு கால பாராளுமன்றப்பணி முடிந்தாலும், இந்த அமைப்புடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். உண்மையை சொல்வதானால், நான் இதன் ஒருங்கிணைந்த அங்கமாக ஆனேன்.

இந்த 5 ஆண்டுகளில், அரசியல் சாசனத்தை கட்டிக்காக்க கடுமையாக முயற்சித்தேன். சொல்லாலும், செயலாலும் இதைச் செய்தேன்.

ஒவ்வொரு படியிலும், பிரதமர் மோடி வழங்கிய அறிவுரையிலும், ஒத்துழைப்பிலும் நான் பெரிதும் பயன் அடைந்தேன். அவர் நாட்டில் முக்கிய மாற்றங்களுக்கு வழிநடத்திச்செல்கிறார். நான் எங்கள் தொடர்பு, இனிமையான, மரியாதையான நடத்தையின் நினைவுகளை சுமந்து கொண்டு செல்வேன்.

நான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்கிறபோது, பாராளுமன்றத்துடனான எனது தொடர்பும் முடிவுக்கு வருகிறது. நான் இனி இந்த பாராளுமன்றத்தின் அங்கம் இல்லை. இது துயரத்தின் சாயலுடன் இருக்கும். வானவில் நினைவுகளுடன் இன்று (நேற்று) இந்த அற்புதமான கட்டிடத்தை விட்டு விடைபெற்று செல்கிறேன்.

அன்பு நண்பர்களே, மிகுந்த நன்றி உணர்வுடன், என் இதயத்தின் பிரார்த்தனையுடன் நான் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நான் இந்த மாபெரும் தேசத்தில், ஒரு தாழ்மையான ஊழியராக மக்களுக்கு சேவையாற்றிய பரிபூரணமான உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story