பாகிஸ்தானுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை ‘‘எல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்’’


பாகிஸ்தானுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை ‘‘எல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்’’
x
தினத்தந்தி 23 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-24T02:39:13+05:30)

காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 நாட்களாக இந்திய ராணுவ நிலைகளையும், எல்லையோர கிராமங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், துணை ஜனாதிபதி வேட்பாளருமான வெங்கையா நாயுடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளை போற்றும் விதமாக ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய வெங்கையா நாயுடு கூறியதாவது:–

இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நாம் கொண்டிருக்கிறோம். அதேபோல் நமது நாகரிகமும் மிகப் பழமையானது. எனவே அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். ஆனால் எல்லையில் சதித்திட்டம் மற்றும் தீய நோக்கத்துடன் செயல்பட்டால் அவர்களுக்கு (பாகிஸ்தான்) வீர தீரமிக்க நமது ராணுவ வீரர்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

எல்லை பகுதியில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தவும் பதற்றத்தை உருவாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் நடக்கிறது. தூதரக ரீதியாக தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள் கூட தவறாக கையாளப்படுகிறது. இதுபோன்ற முயற்சிகள் இன்னும் அதிகளவில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நமது நாடு அமைதியை விரும்பும் நாடாகும். அமைதி என்பது நமது ரத்தத்தில் கலந்து ஓடுகிறது. இதை சீர்குலைக்க முயற்சிக்கும்போது, அதை நமது ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து முறியடிப்பார்கள். இதைத்தான் கார்கில் போரில் நிரூபித்து காட்டினோம். நமது ராணுவ வீரர்களிடம் சாதகமான பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவர்கள் 125 கோடி மக்களின் ஆதரவுடன் எதிரிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்.

1971–ம் ஆண்டு நடந்த போரில் நமது வீரர்கள் திறமையுடன் போரிட்டு எதிரியின் முயற்சிகளை முறியடித்து நாட்டுக்கு புகழ் சேர்த்தனர் என்பது அவர்களுக்கு (பாகிஸ்தான்) நினைவில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story