புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் யூ.ஆர்.ராவ் காலமானார்


புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் யூ.ஆர்.ராவ் காலமானார்
x
தினத்தந்தி 24 July 2017 3:22 AM GMT (Updated: 2017-07-24T08:51:46+05:30)

புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் யூ.ஆர்.ராவ் காலமானார். அவருக்கு வயது 85.

புதுடெல்லி,

புகழ்பெற்ற விஞ்ஞானியும் இஸ்ரோவின் முன்னாள் சேர்மனுமான  உடுப்பி ராமச்சந்திரா ராவ் பெங்களூருவில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யப்பட்டா ஏவுவதில் முக்கிய பங்கு வகித்தவர் இவார் ஆவார். இவரது வழிகாட்டுதலின் பேரில், பாஸ்கரா, ஆப்பிள், ரோஹிணி, இன்சாட்-1, இன்சாட்-2 உள்பட பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

கர்நாடக மாநிலத்தின் அதம்பூர் என்ற கிராமத்தில் 1932ம் ஆண்டு பிறந்த இவர்,  பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் செயற்கைக்கோள் மைய இயக்குனராக செயல்பட்டார். 1984ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக செயல்பட்டார். 1976 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இஸ்ரோ வட்டாரத்தில் யு.ஆர்.ராவ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் உடுப்பி ராமசந்திர ராவ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதயநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இதய நோய் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இரங்கல்

யூ.ஆர் ராவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைசிறந்த விஞ்ஞானியான யூ.ஆர் ராவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராவின் பங்களிப்பை மறக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story