இந்தியாவுக்கு எந்த ஒரு சர்வதேச நாடும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை: சிவசேனா


இந்தியாவுக்கு எந்த ஒரு சர்வதேச நாடும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை: சிவசேனா
x
தினத்தந்தி 24 July 2017 8:23 AM GMT (Updated: 2017-07-24T13:53:35+05:30)

இந்தியாவுக்கு எந்த ஒரு சர்வதேச நாடும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை,

பிரதமர் மோடி சர்வதேச தலைவர்களுடன் நட்புறவை மேற்கொண்டுள்ள போதிலும் சீனா, பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் இந்தியாவுக்கு தற்போது வரை எந்த ஒரு சர்வதேச நாடும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். 

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும் மராட்டிய ஆளும் கட்சி கூட்டணியிலும் அங்கம் வகித்து வரும் சிவசேனா கட்சி அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் உத்தவ் தாக்ரேவின் பேட்டியின் ஒரு பகுதி இன்று வெளியானது. அதில், உத்தவ்தாக்ரே, மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துள்ளார்.  உத்தவ் தாக்ரே கூறுகையில், “ பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றி பல நண்பர்களை பெற்றிருக்கிறார். பிறகு ஏன்? நமது எதிரிகளுக்கு (பாகிஸ்தான், சீனா) எதிராக எந்த ஒரு சர்வதேச நாடும் குரல் கொடுக்கவில்லை. 

சிவசேனா கட்சிதான் தங்களின் முதன்மையான எதிரி என பாரதீய ஜனதா கருதக்கூடும். அதன் காரணமாகவே சீனாவையும் பாகிஸ்தானை புறக்கணிக்கலாம். இந்த இருநாடுகளையும் விட சிவசேனா தான் பிரதான எதிரி என பாஜக கருதினால், இது அவர்களின் துரதிருஷ்டம்தான்.எங்களுக்கு அல்ல. ஆளும் கட்சி தேர்தல்களிலும் உள்கட்சி விவகாரத்திலும் தொடர்ந்து சிக்கி கொண்டு இருக்குமாயின் அது, தேசத்திற்கு செய்யும் மிகப்பெரும் அநீதி ஆகும். நீங்கள் தேர்தலில் எப்போது வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” இவ்வறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்ரே, பிரதமர் மோடி தன்னிட மிகவும் வாஞ்சையோடு நலம் விசாரித்ததகவும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி  நலம் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் மராட்டிய மொழியில் பிரதமர் மோடி உரையாடியதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று, உத்தவ்தாக்ரே அளித்திருந்த பேட்டியில், ஜி.எஸ்.டி,  பண மதிப்பு நீக்கம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து இருந்தார். 

Next Story