நிதாரி கொலை வழக்கு: சுரேந்தர் கோலி, பந்தேர் ஆகிய இருவருக்கு மரண தண்டனை


நிதாரி கொலை வழக்கு: சுரேந்தர் கோலி, பந்தேர் ஆகிய இருவருக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 24 July 2017 9:58 AM GMT (Updated: 2017-07-24T15:28:44+05:30)

நிதாரி தொடர் கொலை வழக்கில் சுரேந்தர் கோலி, பந்தேர் ஆகிய இருவருக்கு மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காசியாபாத்,

டெல்லி அருகே நித்தாரி கிராமத்தில்  கடந்த 2006 ஆம் ஆண்டு 16 பேர் தொடர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

 நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் சுரேந்தர் கோலி, மொஹிந்தர் சிங் ஆகியோருக்கு காசியாபாத் சிறப்பு நீதிமன்றம் 2009 பிப்ரவரி 13-ல் மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுரேந்தர் கோலியும், மொஹிந்தர் சிங்கும் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2009 செப்டம்பர் 11-ல் சுரேந்தர் கோலியின் தண்டனையை உறுதி செய்தது. மொஹிந்தர் சிங் விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து உச்ச நிதிமன்றத்தில் சுரேந்தர் கோலி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சுரேந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. 

இருவருக்கும் எதிராக மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை 8-வது வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், தண்டனை விவரத்தை வாசித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி, மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்று குறிப்பிட்டார். மேலும், சுரேந்திர கோலி, மொஹிந்தர் சிங் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.  மொத்தம் உள்ள 16 வழக்குகளில் 8 வழக்குகளுக்கு தற்போது வரை காசியாபாத் நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

Next Story