மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5-பேர் பலி,30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அச்சம்


மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5-பேர் பலி,30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அச்சம்
x
தினத்தந்தி 25 July 2017 10:59 AM GMT (Updated: 2017-07-25T16:29:24+05:30)

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5-பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

மும்பை,

கிழக்கு மும்பையின் புறநகர் பகுதியான காட்கோபார் பகுதியில் உள்ள நான்கு மாடிக்கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் அதில் வசித்து வந்த 30 க்கும் மேற்பட்டோர்  இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் 7 பேரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். அவர்களில் 5 பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏனைய இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் தீஅணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 30 முதல் 40 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க கூடும் என அஞ்சுவதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடப்பதாக வீரர்கள் தெரிவித்தனர். மும்பை மாநகாரட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மழை காலங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு நேரிடுவது வழக்கமாகி வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பை புறநகரில்  கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 12 பேர் பலியாகியது நினைவிருக்கலாம்.

Next Story