வரும் ஆண்டுகளில் சீனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும்


வரும் ஆண்டுகளில் சீனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும்
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 25 July 2017 7:46 PM GMT)

வரும் ஆண்டுகளில், சீனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்று ராணுவ துணைத்தளபதி கூறினார்.

புதுடெல்லி,

இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில், இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்தது. அங்கு முறைகேடாக சாலை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் இந்திய ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய படைகளை திரும்பப்பெற வேண்டும் என்று சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையால், அந்த பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ராணுவமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த ‘அமிகான்–2017’ என்ற கருத்தரங்கம் நேற்று டெல்லியில் தொடங்கியது. அதில், ராணுவ துணைத்தளபதி சரத் சந்த் பேசியதாவது:–

சீனா, இமயமலை முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதுடன், நமது அண்டை நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. நம்மை விட ஐந்து மடங்கு பொருளாதார பலம் வாய்ந்ததாகவும், பெரிய ராணுவத்தை கொண்டிருந்தும் சீனா இக்காரியத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், இரு நாடுகளிடையே இமயமலை இருந்தபோதிலும், வரும் ஆண்டுகளில் சீனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும். சீனா, தனது ராணுவத்துக்கு செலவழிக்கும் உண்மையான தொகை அறிவிக்கப்படவில்லை.

சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதை பெரிதுபடுத்த வேண்டாம். அவர் போர் பீதியை உண்டாக்கவில்லை. நமது பாதுகாப்பில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற பொருளில்தான் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்து நடந்துகொள்கிறது.

இந்திய ராணுவம் இதுபோன்று ஒருபோதும் நடந்தது இல்லை. நாம் பதிலடி கொடுக்கும்போது கூட பாகிஸ்தான் ராணுவம், அதன் பதுங்கு குழிகள், பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆகியவற்றை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்துவோம்.

நமது பாராளுமன்றத்தை தாக்கியதற்காக, பாகிஸ்தான் மீது நாம் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். இருப்பினும் நடத்தவில்லை. பாகிஸ்தான் சிறிய நாடு. அதன் பொருளாதார பலமும் சிறியது. அதனால்தான், முழு அளவிலான போருக்கு வராமல், சிறிய அளவிலான மோதலில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story