6 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்


6 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-26T01:21:04+05:30)

பாராளுமன்றத்தில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரை நேற்று முன்தினம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இடை நீக்கம் செய்தார். அவர்கள் இந்த வாரம் முழுவதும் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள தடையும் விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

மேலும், மோடி அரசுக்கு எதிராகவும், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கமிட்டனர். நாட்டைக் காக்க பா.ஜனதாவை நாம் வெளியேற்றவேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா (காங்கிரஸ்), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), மல்லிகார்ஜூன கார்கே, சவுகதா ராய், கல்யான் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் (ராஷ்டிரிய ஜனதாதளம்) மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களான கவுரவ் கோகாய், கே.சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ரஞ்ஜித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், எம்.கே.ராகவன் ஆகியோரும் பங்கேற்றனர்.


Next Story