காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு


காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 July 2017 10:15 PM GMT (Updated: 25 July 2017 7:59 PM GMT)

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

பாராளுமன்றம் நேற்று காலை தொடங்கிய உடன் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா எழுந்து பேசுகையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் வீரேந்திர குமார், நந்தகுமார் சிங் சவுகான் ஆகியோர் தலித் சமுதாயம் தொடர்பாக என் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர். அது உண்மை என நிரூபித்தால் நான் எம்.பி. பதவியை விட்டு விலக தயாராக உள்ளேன். அதே சமயம் அவர்கள் உண்மையை நிரூபிக்க தவறினால் பதவியை ராஜினாமா செய்வார்களா? என சவால் விட்டார்.

இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, தலித் சமுதாய நலனுக்காக சிந்தியா இந்த அவையில் பேசி வருகிறார். அவர் பெயரை வேண்டும் என்றே கெடுக்கும் நோக்கில் பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசி உள்ளனர். இப்பிரச்சினையில் மத்திய மந்திரி அனந்தகுமார் எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறார் என குற்றம்சாட்டினார்.

பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்.பி.க்களை இருக்கையில் சென்று அமருமாறு அறிவுறுத்தினார். எனினும் தொடர்ந்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த அவர், தொடர்ந்து நீங்கள் கூச்சலிட்டால் அவையை எப்படி நடத்துவது? அவையை சுமுகமாக நடத்தும் எண்ணம் உங்களுக்கு இல்லையா? அவை மரபுப்படி உங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க வேண்டும். எனக்கு அவையை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் பாடம் நடத்த வேண்டாம் என தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.


Next Story