டெல்லியில் தமிழக விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு


டெல்லியில் தமிழக விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 July 2017 11:30 PM GMT (Updated: 25 July 2017 8:30 PM GMT)

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த 16–ந் தேதி முதல் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

போராட்டத்தின் 10–வது நாளான நேற்று சுமார் 20 விவசாயிகள் போராட்டக் குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:–

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு ஏன் மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறித்து முதல்வரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் ‘ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது மற்றும் பல இடங்களில் மதுக்கடைகளும் மூடப்பட்டதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனைவருடைய கடன்களையும் ரத்து செய்யும் வகையில் மாநில அரசிடம் பணம் இல்லை. எனவே மேல்முறையீட்டுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்போம்’ என எங்களிடம் கூறினார்.

மேலும், தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை மத்திய அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும் என எங்கள் கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்குமாறு கேட்டுள்ளதாகவும், தேசிய வங்கிகள் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என வங்கி அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடமும் கூறியிருப்பதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்தார்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிப்பதுதான் எங்களது முக்கியமான கோரிக்கை. விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு டெல்லியில்தான் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு அமைதியை கடைப்பிடிக்கிறது. தமிழக அரசும் எங்களுக்கு உதவாமல் மத்திய அரசுக்கு பயந்து உள்ளது. அதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக போராட்டம் நடத்துகிறோம்.

தமிழக பா.ஜ.க.வினர் ஜந்தர் மந்தர் சாலையில் எங்கள் மீது காரை ஏற்றி கொல்வதாகவும், எனக்கு தனிப்பட்ட முறையிலும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு காரணம் எச்.ராஜா.

எனவே பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தில் நாங்கள் எச்.ராஜா மீது புகார் பதிவு செய்திருக்கிறோம். இந்த மிரட்டல்கள் குறித்து முதல்வரிடம் கூறினோம். ஆனால் அவர் கருத்து ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தார்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.


Next Story