பிரதமர் நரேந்திர மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்


பிரதமர் நரேந்திர மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 July 2017 12:00 AM GMT (Updated: 25 July 2017 8:48 PM GMT)

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் அங்குள்ள மைய மண்டபத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

தமிழ்நாடு இல்லம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு தி.மு.க. ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. கதிராமங்கலத்தில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அது பழைய திட்டம்தான். தற்போது அங்கு எண்ணெய் குழாய்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. அதில்தான் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வி‌ஷயத்தில் தமிழ்நாடு அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும்.

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு என்றும், அதனால்தான் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அய்யாக்கண்ணு சொல்வது தவறு. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் மத்திய அரசை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.பி.க்கள் குழுவினருடன் முன்னாள் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இல்லத்துக்கு சென்றார். பா.ஜனதா சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள அவருக்கு தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது எம்.பி.க்கள், வெங்கையா நாயுடுவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

முன்னதாக வெங்கையா நாயுடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், துணை ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி, வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக முடிவு செய்து, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். தமிழ்நாடு மீதும், தமிழக மக்கள் மீதும் அவர் மிகுந்த அன்பு கொண்டவர். ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார் என்றார்.

பின்னர் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில் தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண துணை ஜனாதிபதி என்ற முறையிலும், டெல்லி மேல்–சபை தலைவர் என்ற முறையிலும் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன்’ என்றார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Next Story