சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு


சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 July 2017 10:30 PM GMT (Updated: 26 July 2017 7:53 PM GMT)

சுகேசுக்கு ஜாமீன் வழங்க தனிக்கோர்ட்டும், டெல்லி ஐகோர்ட்டும் ஏற்கனவே மறுத்துவிட்ட நிலையில், அவர் தனிக்கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீது தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சுகேசுக்கு ஜாமீன் வழங்க தனிக்கோர்ட்டும், டெல்லி ஐகோர்ட்டும் ஏற்கனவே மறுத்துவிட்ட நிலையில், அவர் தனிக்கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். தன்னிடம் போலீஸ் விசாரணை முடிந்து விட்டதால் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது சுகேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இந்த வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதால், சுகேசையும் ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் போலீஸ் தரப்பு வக்கீல், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி பூனம் சவுத்ரி ஒத்திவைத்தார். சுகேஷ் மீதான குற்றப்பத்திரிகையை வருகிற ஆகஸ்டு 3–ந் தேதி ஆய்வு செய்து ஜாமீன் வழங்குவது பற்றி தீர்மானிக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார்.


Next Story