நிதிஷ் குமார் ஏமாற்ற மட்டும் செய்யவில்லை, பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார் - லாலு


நிதிஷ் குமார் ஏமாற்ற மட்டும் செய்யவில்லை, பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார் - லாலு
x
தினத்தந்தி 27 July 2017 10:19 AM GMT (Updated: 2017-07-27T15:49:38+05:30)

நிதிஷ் குமார் ஏமாற்ற மட்டும் செய்யவில்லை பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார் என லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்து உள்ளார்.

பாட்னா, 

ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆரில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயர் இடம்பெற்றது. இதனையடுத்து மகா கூட்டணியில் பிளவு உருவாக தொடங்கியது. பீகார் மாநில முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் நேற்று ராஜினாமா செய்தார். மீண்டும் இன்று பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு திரும்பி உள்ளார். 

மகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து நிதிஷ் ஆட்சி அமைத்து உள்ளதை லாலு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக ராஞ்சி சென்று உள்ளார். 

நிதிஷ் குமாரின் மீது கடும் கோபம் கொண்டு உள்ள லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் பீகார் மக்களை ஏமாற்ற மட்டும் செய்யவில்லை, முதுகில் குத்திவிட்டார் என்று கூறிஉள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், பா.ஜனதா உடனான நிதிஷ் குமார் கூட்டணி ஏற்கனவே எழுதப்பட்டது. இவை அனைத்தும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுஷில் குமார் மோடியின் வியூகம், என் மீதும் என்னுடைய குடும்பத்தார் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டினார் என்றார். 

இப்போது நடக்கும் செயல்கள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றார் லாலு பிரசாத் யாதவ்.

நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரான மாநிலங்களவை எம்.பி. ஆர்சிபி சிங்கை விமர்சனம் செய்த லாலு, “நிதிஷ் குமார், ஆர்சிபி சிங்கின் அறிவுரையின்படியே செயல்படுகிறார், அவரைப்பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும், இப்போது நிதிஷ் குமாருக்கு இந்த அறிவுரையை வழங்கி உள்ளார். பாரதீய ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தால் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என ஆர்சிபி சிங் தன்னுடைய திட்டத்தை முன்னெடுத்து உள்ளார், அவர்கள் அனைவரும் சதிதிட்டம் தீட்டிஉள்ளனர் என்றார். 

 “இருப்பினும், நான் சுப்ரீம் கோர்ட்டு செல்வேன். பீகாரில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைதான் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து இருக்கவேண்டும். உங்களுக்கு எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தெரிந்து இருக்கும்,” என்று கூறிய லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் உள்ளேன் என்றார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் வழியாக லாலு பிரசாத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என நிதிஷ் குமார் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளார். 

நிதிஷ் குமாரே கொலை வழக்கு குற்றவாளியாவார், கோர்ட்டும் கவனம் செலுத்துகிறது என்று லாலு பிரசாத் அதுதொடர்பான ஆவணங்களை காட்டினார். 

நிதிஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி, பீகார் மாநில மக்கள் தேர்தலில் கொடுத்த வெற்றியானது பாரதீய ஜனதாவிற்கு எதிரானது, மோடி மற்றும் அமித்ஷாவை வெளியேற்ற கிடைத்த வெற்றியாகும். நான் பேராசைகாரன் என்றால் நிதிஷ் குமாரை முதல்-மந்திரி ஆக்கியிருக்கமாட்டேன். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறினார் நிதிஷ் குமார். ஏமாற்றிவிட்டார். பாரதீய ஜனதா நாட்டை ஏமாற்றுகிறது. அமித்ஷா சிறப்பான தலைமை செய்தி ஆசிரியர், செய்திகள் எப்படி ஒளிபரப்பாக வேண்டும் என்பதை அவரே தீர்மானம் செய்கிறார். 

அமித்ஷா மீடியா உரிமையாளர்களிடம் பேசுகிறார், அவர்கள் செய்தி ஆசிரியர்களிடம் பேசுகிறார், இது செய்தியாளர்கள் தவறு கிடையாது என்றார் லாலு பிரசாத் யாதவ்.

Next Story