குஜராத்தில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, பாரதீய ஜனதாவில் சேர்கிறார்கள்


குஜராத்தில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, பாரதீய ஜனதாவில் சேர்கிறார்கள்
x
தினத்தந்தி 27 July 2017 1:01 PM GMT (Updated: 2017-07-27T18:31:49+05:30)

குஜராத்தில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து உள்ளனர், அவர்கள் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆமதாபாத்,சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் பாரதீய ஜனதா சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்திற்கு வாக்களித்தார்கள். இவ்விவகாரம் காங்கிரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்துவரும் காங்கிரசுக்கு மற்றொரு பின்னடைவாக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பால்வாந்த் சிங் ராஜ்புத், தேஷ்ஸ்ரீ படேல் மற்றும் பி.ஐ. படேல் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருந்து மூன்று மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்வு செய்யப்பட உள்ளநிலையில் அவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளார்கள் என தெரிகிறது.

மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் ரமன்லாலிடம் சமர்பித்து உள்ளனர். 

குஜராத் மாநில மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் போட்டியிடுகிறார். இந்நிலையில் குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருக்கும் ராஜ்புத்தை பாரதீய ஜனதா அகமது படேலுக்கு எதிராக களமிறக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மூன்று எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பாரதீய ஜனதா, அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானியை வேட்பாளராக அறிவித்துவிட்டது. காங்கிரஸ் சார்பில் அகமது படேல் வெற்றி பெறுவார் என்ற நிலையில் இந்த வியூகம் எழுந்து உள்ளது.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சங்கர்சிங் வாகேலே சமீபத்தில் அக்கட்சியை விட்டு விலகினார். இப்போது ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ள ராஜ்புத் அவருடைய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story