கீழடியில் எடுக்கப்பட்ட பொருள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது


கீழடியில் எடுக்கப்பட்ட பொருள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது
x
தினத்தந்தி 27 July 2017 11:15 PM GMT (Updated: 27 July 2017 9:36 PM GMT)

கீழடியில் எடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கனிமொழி எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பதில் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லி மேல்–சபையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை மந்திரி மகேஷ் சர்மா, ‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளும், மற்றொரு பொருள் 2,200 ஆண்டுகளும் பழமையானவை. கீழடியில் கிடைத்த 2 பொருளையும் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. மேலும், அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, அங்கு சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் வரலாற்று பொக்கி‌ஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5,300 தொன்மை வாய்ந்த பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. அந்த அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் கரிம பகுப்பாய்வு சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் கீழடியில் இருந்தது நகர நாகரிகம் என்றும், அது கி.மு. 2–ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதும் உறுதிபடுத்தப்பட்டது’ என்றார்.

சமீபத்தில் வான்னக்ரிப்ட் என்ற ஒரு கணினி வைரஸ் உலகில் பெரும்பாலான கணினிகளை தாக்கி, அவற்றை பூட்டி வைத்து, பிணைத் தொகை அளித்தால் தான் அந்த தடையை நீக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது. இதை தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, இனி வருங்காலத்தில் இது போன்ற வைரஸ் தாக்குதல்கள் வந்தால் அதை தவிர்ப்பதற்கு அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான மத்திய இணை மந்திரி பி.பி.சவுத்ரி கூறியதாவது:–

கணினி மற்றும் செல்போன்களை தாக்க புதிதாக வரும் வைரஸ் தொடர்பான தகவல்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் அனைத்தும் ‘செர்ட் இன்’ என்ற நிறுவனத்தால் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடைவெளி இல்லாமல் வைரஸ் தாக்குதல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், புத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் இணையதளத்தில் கையேடுகள் போன்றவற்றை, குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் இதரர்களுக்காக வெளியிட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story