பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் நிதிஷ் குமார்


பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் நிதிஷ் குமார்
x
தினத்தந்தி 28 July 2017 3:21 AM GMT (Updated: 28 July 2017 3:21 AM GMT)

பாஜக ஆதரவுடன் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட நிதிஷ் குமார் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி ஆட்சியமைத்து இருந்தது. முதல்-மந்திரியாக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரும், துணை முதல்-மந்திரியாக ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.

இந்த ஆட்சி சுமார் 2 ஆண்டுகளை எட்டியிருந்த நிலையில் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஓட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி  விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது. 

இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார் தனது முதல்-மந்திரி பதவியை நேற்று முன்தினம் இரவு திடீரென ராஜினாமா செய்தார். மாநில பொறுப்பு கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதிரடி திருப்பமாக நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமாரும் துணை முதல் மந்திரியாக பாஜகவைச்சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர். 

புதிதாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 

இதில் நிதிஷ் குமார், தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோருவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.243 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 132 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கு 80 இடங்களும், காங்கிரசுக்கு 27 இடங்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுக்கு 3 இடங்களும் உள்ளன. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெறும் என தெரிகிறது.

Next Story